ஆஸி., பல்கலையுடன் இணைந்து மெட்ரோ ரயில் நிறுவனம் ஆராய்ச்சி
ஆஸி., பல்கலையுடன் இணைந்து மெட்ரோ ரயில் நிறுவனம் ஆராய்ச்சி
ADDED : ஜூன் 17, 2025 08:28 PM

புதுடில்லி:மெட்ரோ ரயில் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைக்க, ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் மோனாஷ் பல்கலையுடன், டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ரயில்வே பொறியியல் மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஒத்துழைக்க, ரயில்வே தொழில்நுட்ப நிறுவனம் வாயிலாக ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போன் நகரில் உள்ள மோனோஷ் பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ரோலிங் ஸ்டாக்கின் மேம்பட்ட ஆட்டோமேஷன் மற்றும் தண்டவாள பராமரிப்பு போன்றவற்றில் இரு நிறுவனங்களும் கூட்டாக ஆய்வு செய்யும்.
மோனாஷ் பல்கலையுடன் பரிமாற்ற திட்டங்கள் உட்பட கூட்டு நடவடிக்கைகளுக்கான அறிவு மற்றும் பயிற்சி ஒப்பந்ததாரராக டில்லி மெட்ரோ ரயில் நிறுவன அகாடமி செயல்படும்.
மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்களின் திறன்களை மேம்படுத்த, தொழில்நுட்ப ரீதியாகவும் இரு தரப்பினரும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வர்.
மெட்ரோ ரயில் பயணியரின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான சிறந்த தொழில்நுட்பத்தை, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனமும் செயல்படுத்தும். மேலும், பராமரிப்பில் புதுமையான திட்டங்களும் செயல்பாட்டுக்கு வரும்.
மோனாஷ் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
புதுடில்லி மெட்ரோ பவனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.