ADDED : பிப் 21, 2024 01:41 AM

பெங்களூரு : தொழில்நுட்ப கோளாறால், அரைமணி நேரத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டதால், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இடம் பிடிக்க பயணியர் அடித்து, பிடித்து ஏறியதால் பரபரப்பு உண்டானது.
பெங்களூரில் செல்லகட்டா - ஒயிட்பீல்டு 43.49 கிலோ மீட்டர் துாரத்திற்கு, மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில் செல்லும் வழித்தடத்தில் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள், ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. இதனால் மெட்ரோ ரயிலில் காலை, மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் இருக்கும். பயணியர் வசதிக்காக 10 நிமிடங்களுக்கு, ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை பையப்பனஹள்ளி - கருடாச்சார்பாளையா, ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், ரயில் பாதையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
அரைமணி நேரத்திற்கு, ஒரு ரயில் இயக்கப்பட்டது. இதனால் ரயில் நிலையங்களில், பயணியர் கூட்டம் அலைமோதியது.
ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்கள் அடித்து, பிடித்து ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டு மணி நேரத்திற்கு பின்னர், தொழில்நுட்பக் கோளாறு சரியானதும், வழக்கம் போல 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக நிலைமை சீரானது.

