பெலகாவியில் ராணுவத்தினர் கட்டிய மிலிட்டரி மஹாதேவா கோவில்
பெலகாவியில் ராணுவத்தினர் கட்டிய மிலிட்டரி மஹாதேவா கோவில்
ADDED : பிப் 22, 2024 11:02 PM

கர்நாடகாவில் மிகவும் சுத்தமான கோவில் என்று அழைக்கப்படும் பெலகாவியில் உள்ள 'மிலிட்டரி மஹாதேவா கோவில்' நமது ராணுவத்தினரால் பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கோவில்கள் என்றால் பொது மக்களிடம் நன்கொடை வசூலித்து கட்டப்படும். ஆனால், பெலகாவி நகரில் காங்கிரஸ் சாலையில், நமது ராணுவத்தின் தென் கமாண்டர் இன் சீப் லெப்டினன்ட் ஜெனரல் நாகேஷ், 1954ல் சிவன் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார்.
தென் மாநிலங்களில் உள்ள கோவில்கள் வடிவில் கட்டப்பட்ட இந்த கோவிலை சுத்தமாக பராமரித்து வந்தனர். 1955 முதல் பொது மக்களும் இந்த கோவிலை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அன்று முதல் இக்கோவிலை, 'மிலிட்டரி மஹாதேவா கோவில்' என்று பக்தர்கள் அழைத்து வருகின்றனர்.
இக்கோவிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோவிலில் சிறியளவில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையில் புள்ளி மான்கள், ஈமு கோழிகள், மயில், வாத்துகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் சிவ தீர்த்தமும், பக்தர்களை ஈர்த்துள்ளன.
ஏழு தலை நாகங்களுடன் மூலவர் சிவனை பார்த்தபடி, இரண்டு நந்தி விக்ரஹங்கள் அமைந்திருப்பது இக்கோவிலில் சிறப்பாகும்.
மஹா சிவராத்திரியின் போது, சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படுகிறது. விசேஷ நாட்கள் மட்டுமின்றி, தினமும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பெங்களூரில் இருந்து விமானம், ரயில், பஸ்கள் மூலம், பெலகாவி செல்லலாம். அங்கிருந்து மிலிட்டரி மஹாதேவா கோவிலுக்கு பஸ், டாக்சி, ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன
- நமது நிருபர் -.