விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை: கார்கே உறுதி
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை: கார்கே உறுதி
UPDATED : பிப் 17, 2024 11:35 AM
ADDED : பிப் 17, 2024 10:46 AM

புதுடில்லி: 'விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.,) சட்டப்படி காங்கிரஸ் பெற்றுத் தரும்' என அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இது குறித்து கார்கே கூறியிருப்பதாவது: வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., அரசு பலமுறை பொய் சொல்லி வருகிறது. மக்கள் பிரதமரை புகழ்ந்தால், நாடு பேரழிவை நோக்கிச் செல்லும். நாட்டில் ஜனநாயகம் இருக்காது. காங்கிரசில் சில நபர்களை கட்சி தொண்டர்களும், மக்களும் இணைந்து பெரிய தலைவர்களாக ஆக்கியுள்ளனர். அவர்கள் மற்ற கட்சிகளுக்கு ஓடிப் போகின்றனர். இது கோழைத்தனமான செயலைத் தவிர வேற ஒன்றும் இல்லை.
நாங்கள் பயப்பட வேண்டியதில்லை. பயந்தால் அழிந்து போவோம். ஒரு நாள் வெற்றி நமதே. நாட்டின் விவசாயிகளுக்கு எதிராக பா.ஜ., அரசு செயல்படுகிறது. தொடர்ந்து பொய்யான மோடி உத்தரவாதத்தால் முதலில் 750 விவசாயிகள் உயிரிழந்தனர். தற்போது நேற்று 1 விவசாயி உயிரிழந்தார். 3 பேர் ரப்பர் தோட்டாக்களால் கண்பார்வை இழந்துள்ளனர். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி.,) சட்டப்படி காங்கிரஸ் பெற்று தரும். இவ்வாறு கார்கே கூறினார்.