ADDED : ஏப் 16, 2025 08:43 PM
விக்ரம்நகர்:தனித்திறமையான மற்றும் தனித்திறமையற்ற தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை மாநில அரசு உயர்த்தியுள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசின் செயலர் மற்றும் தொழிலாளர் ஆணையர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை:
திட்டமிடப்பட்ட வேலைகளில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை அரசு உயர்த்தியுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி முதல் மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படி விகிதங்கள் காரணமாக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் பலனடைவர்.
தனித்திறமையற்ற தொழிலாளர்களுக்கான மாத ஊதியம் 18,066 ரூபாயில் இருந்து 18,456 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரைத் திறன் பெற்ற தொழிலாளர்களுக்கான மாத ஊதியம் 19,929 ரூபாயில் இருந்து 20,371 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மெட்ரிக்குலேஷன் அல்லாதவர்கள் உட்பட திறமையான தொழிலாளர்களுக்கு 21,917ல் இருந்து 22,411 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு, புதிய ஊதியம் 24,356 ரூபாயாக இருக்கும். பழைய ஊதியம் 23,836 ரூபாய்.
குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை விட குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மாவட்டங்களில் உள்ள கூட்டுத் தொழிலாளர் ஆணையரிடம் மனு அளிக்கலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.