வன்முறையாளர்களிடம் இருந்து தப்பிக்க வீட்டுக்கு முள்வேலி போட்ட அமைச்சர்
வன்முறையாளர்களிடம் இருந்து தப்பிக்க வீட்டுக்கு முள்வேலி போட்ட அமைச்சர்
ADDED : நவ 23, 2024 05:16 AM

இம்பால்: மணிப்பூரில் போராட்டக்காரர்களால் தாக்கப்படுவதால் உஷாரான அமைச்சர் சுசீந்ரோ மெய்தேய், தன் வீட்டை சுற்றி இரும்பு மற்றும் முள் வேலி அமைத்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
மோதல் நீடிப்பு
இங்கு மெய்டி மற்றும் கூகி பழங்குடியினர் இனத்துக்கு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த மாதம் முதல் இங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் தலைதுாக்கியுள்ளன.
சமீபத்தில் நடந்த கலவரத்தின்போது மெய்டி கிளர்ச்சியாளர்கள், மூன்று அமைச்சர்கள், ஆறு எம்.எல்.ஏ.,க்களின் வீடுகளில் தாக்குதல் நடத்தினர். இதில், அமைச்சர் சுசீந்ரோ மெய்தேய் வீடும் தாக்குதலுக்கு உள்ளானது.
இதையடுத்து, வன்முறையாளர்களிடம் இருந்து, தன் பாரம்பரியமிக்க மூதாதையர் வீட்டை பாதுகாக்கும் வகையில், வீட்டை சுற்றி இரும்பு மற்றும் முள்வேலிகளை சுசீந்ரோ அமைத்துள்ளார்.
தனக்கு பாதுகாவலர்களாக இருக்கும் பாதுகாப்பு படையினர் தங்குவதற்கு, பதுங்கு குழிகளையும் அமைத்து கொடுத்துள்ளார். இது குறித்து சுசீந்ரோ கூறுகையில், “கடந்த 16ல், நான் வீட்டில் இல்லாதபோது, 3,000 பேர் அடங்கிய கும்பல் என் வீட்டினுள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது.
''பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அதனால், என் வீட்டைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளேன்.
''போராட்டக்காரர்கள் தாக்கும்போது, எங்கள் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ உரிமை எங்களுக்கு உள்ளது,” என்றார்.
பங்கேற்க வேண்டாம்
இதற்கிடையே, 'முதல்வர் பைரேன் சிங் தலைமையில் நடக்கும் அமைதி கூட்டத்தில் தேசிய மக்கள் கட்சி உறுப்பினர்கள் யாரும் பங்கேற்க வேண்டாம். அதேபோல், கட்சி தலைமையின் உத்தரவின்றி ஊடகங்களில் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்' என, அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.
ஆளும் பா.ஜ., அரசுக்கு அளித்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி வாபஸ் பெற்ற பின், பைரேன் சிங் தலைமையில் கடந்த 18ம் தேதி நடந்த அரசு கூட்டத்தில், தேசிய மக்கள் கட்சியின் மூன்று எம்.எல். ஏ.,க்கள் பங்கேற்றதை அடுத்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.