மாண்டியா காங்., தலைவர்கள் சுமலதாவுக்கு எதிர்ப்பு கதவை 'ஓங்கி அடைத்த' அமைச்சர் செலுவராயசாமி
மாண்டியா காங்., தலைவர்கள் சுமலதாவுக்கு எதிர்ப்பு கதவை 'ஓங்கி அடைத்த' அமைச்சர் செலுவராயசாமி
ADDED : பிப் 10, 2024 11:35 PM

பா.ஜ., ஆதரவு எம்.பி., சுமலதாவை காங்கிரஸுக்கு அழைத்து வந்து, மாண்டியா தொகுதி வேட்பாளராக அறிவிப்பதற்கு, அமைச்சர் செலுவராயசாமி உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.
ஒவ்வொரு லோக்சபா தேர்தலின்போதும், மாண்டியா தொகுதி 'ஹாட் டாப்பிக்' தொகுதியாக மாறி வருகிறது. வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் ஒக்கலிகர் சமூக ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த தொகுதியில் 1952 முதல் 2019 வரை, 21 தேர்தல்கள் நடந்து உள்ளன. காங்கிரஸ், ம.ஜ.த., மாறி, மாறி வெற்றி பெறுகின்றன.
பா.ஜ.,வால் இந்த தொகுதியில் வெற்றி பெறவே முடியவில்லை. இந்நிலையில் கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மாண்டியாவை ம.ஜ.த.,வுக்கு, காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது. குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ., ஆதரவுடன் சுமலதா சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.
ஆசை
வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட, சுமலதா ஆசைப்படுகிறார். ஆனால் மாறிவிட்ட அரசியல் சூழ்நிலையில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த ம.ஜ.த., மாண்டியா தொகுதியை கேட்கிறது. ஒருவேளை பா.ஜ., 'சீட்' கிடைக்காவிட்டால், சுமலதாவை காங்கிரஸுக்கு அழைத்து வந்து, 'சீட்' கொடுக்க வேண்டும் என்பது, முதல்வர் சித்தராமையாவின் விருப்பமாக உள்ளது. இதற்கு மாண்டியா காங்கிரஸ் தலைவர்கள், எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். குறிப்பாக அமைச்சர் செலுவராயசாமி, எக்காரணம் கொண்டும், சுமலதா காங்கிரசுக்கு வந்துவிட கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். பா.ஜ., 'சீட்'டுக்கு ஆசைப்படுபவரை எதற்காக, நமது கட்சிக்கு அழைத்து வர வேண்டும் என்று கேட்டு வருகிறார்.
இந்நிலையில், லோக்சபா தொகுதி மாண்டியா தொகுதி வேட்பாளரை காங்கிரஸ் இறுதி செய்து விட்டதாகவும், அறிவிப்பு வெளியாவது மட்டுமே பாக்கி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வேட்பாளர் பெயர் வெங்கடரமணகவுடா என்கிற ஸ்டார் சந்துரு. ஒப்பந்ததாரரான இவர் அனைத்து கட்சி தலைவர்களுடன் நட்பில் இருக்கிறார்.
அமைச்சர் தொகுதி
அமைச்சர் செலுவராயசாமியின் சொந்த தொகுதியான, நாகமங்களாவை சேர்ந்தவர். வெங்கடரமணகவுடாவின் தம்பி புட்டசாமி கவுடா. கவுரிபிதனுார் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.,வாகவும், மருமகன் சரத் பச்சேகவுடா ஹொஸ்கோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளனர்.
இது வெங்கடரமணகவுடாவுக்கு அனுகூலமாக பார்க்கப்படுகிறது. அவர் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்றும், மாண்டியா காங்கிரஸ் தலைவர்கள் நம்புகின்றனர். உண்மையை சொல்ல போனால், சுமலதாவுக்கு காங்கிரஸ் கதவு அடைக்கப்பட்டு உள்ளது.