பின்தங்கிய 1000 இன்ஜி., கல்லுாரிகள்: தரம் உயர்த்த ஏ.ஐ.சி.டி.இ., நடவடிக்கை
பின்தங்கிய 1000 இன்ஜி., கல்லுாரிகள்: தரம் உயர்த்த ஏ.ஐ.சி.டி.இ., நடவடிக்கை
ADDED : செப் 18, 2025 01:38 AM

சென்னை:அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எனும், ஏ.ஐ.சி.டி.இ., இன்ஜினியர்கள் தினத்தையொட்டி, கல்வி மேம்பாட்டுக்கான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், 'ப்ராஜெக்ட் பிராக்டிஸ்' திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுதும் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கல்வி தரத்தில், இரண்டு மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள, 1000 கல்லுாரிகளை தேர்வு செய்து, அவற்றை தரம் உயர்த்த நட வடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அக்கல்லுாரிகளில், அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய திட்டங்கள் குறித்து கற்றல், நேரடி தொழில் பயிற்சி, மேம்படுத்தப்பட்ட வேலை வாய்ப்பு பயிற்சி போன்றவை செயல்படுத்தப்பட உள்ளன. இதன் வாயிலாக, நேரடியாக 20 லட்சம் மாணவர்கள், 10,000 பேராசிரியர்கள் பயனடைவர் என, ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், 'சாட் ஜி.பி.டி' போன்ற செயற்கை நுண்ணறிவு தளங்களை, மாணவர்கள் இலவசமாக பயன்படுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் ஊக்கவிக்கப்படும் என, ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துள்ளது.