ADDED : பிப் 04, 2025 03:10 AM

புதுடில்லி : 'பழங்குடியினர் விவகாரத்துறைக்கு உயர் ஜாதியை சேர்ந்தவர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்' என, மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழத்துவங்கி உள்ளன.
மலையாள திரைப்பட நடிகரும், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சருமான சுரேஷ் கோபி, டில்லியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும்போது, ''பழங்குடியினர் விவகாரத்துறைக்கு உயர் ஜாதியை சேர்ந்த ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்.
''அதேபோல, உயர் ஜாதியினர் நலன் சார்ந்த துறையில், பழங்குடியினத்தை சேர்ந்தவரை அமைச்சராக நியமிக்க வேண்டும்,'' எனப் பேசினார்.
இதற்கு கேரளாவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும்படி எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்ப்பு வலுக்க துவங்கியுள்ளதை அடுத்து, ''சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த கருத்தை தெரிவித்தேன்.
''மற்றபடி யாரையும் கெட்டவர்களாகவோ, நல்லவர்களாகவோ சித்தரிக்கும் எண்ணம் இல்லை. என் பேச்சு சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை எனில் என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்,'' என, சுரேஷ் கோபி தெரிவித்தார்.

