ADDED : ஆக 20, 2025 10:25 AM
புதுடில்லி: மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக ரஷ்யாவுக்கு நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சென்றார்.
ரஷ்யாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவின் அழைப்பின்படி, ஆக., 19 - 21 வரை மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக, அந்நாட்டுக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.
மாஸ்கோவில் இன்று, இந்தியா -- ரஷ்யா இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆணையத்தின், 26-வது அமர்வு நடக்கிறது.
இதில், ரஷ்ய துணை பிரதமர் டெனிஸ் மந்துரோ, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கின்றனர். ரஷ்ய அதிபர் புடின் இந்தாண்டு இறுதியில் இந்தியா வர உள்ள நிலையில், அது குறித்து இருவரும் விவாதிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை, அமைச்சர் ஜெய்சங்கர் சந்திக்கிறார்.
அப்போது, உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கும் முயற்சிகள் குறித்து இருவரும் ஆலோசிப்பர் என, கூறப்படுகிறது.
இந்தியா - ரஷ்யா எரிசக்தி உறவுகள் குறித்தும், ரஷ்ய அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விவாதிக்க உள்ளார்.