பைலுசீமா பகுதி வளர்ச்சி வாரிய முறைகேடு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்க உத்தரவு
பைலுசீமா பகுதி வளர்ச்சி வாரிய முறைகேடு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்க உத்தரவு
ADDED : பிப் 15, 2024 05:26 AM

பெங்களூரு : ''அரசு அனுமதியின்றி, 362.53 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்,'' என சிறிய நீர்ப்பாசன துறை அமைச்சர் போசராஜு தெரிவித்தார்.
சட்ட மேலவையில் விதி 72ன் கீழ், காங்கிரஸ் உறுப்பினர் அனில் குமார், 'பையலுசீமா பகுதி வளர்ச்சி வாரியத்தில் நடந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு திட்டம், புள்ளியல் துறை டி.சுதாகருக்கு பதிலாக பதில் அளித்த, சிறிய நீர்ப்பாசன துறை அமைச்சர் போசராஜு:
பையலுசீமா பகுதி வளர்ச்சி வாரிய செயலர்கள், அவர்களுக்குள் முடிவெடுத்து, 362.53 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பினர். அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
ஆனால், அரசின் அனுமதியின்றி, பணிகள் துவங்க உத்தரவிட்ட செயலர், துணை செயலர், நிர்வாகி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
(இவரின் பதிலால் திருப்தி அடையாத உறுப்பினர்கள், 'பைலுசீமா பகுதி வளர்ச்சி வாரிய எல்லைக்கு உட்பட்ட எம்.எல்.ஏ., க்கள், எம்.எல்.சி.,க்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. ஆனால், 35 லட்சத்துக்கு செயல் திட்டம் தருவதாக கூறி, 65 லட்சம் மானியம் வாபஸ் பெறப்பட்டது.
சில அதிகாரிகள் செய்த தவறுக்காக, எங்கள் மானியத்தை ஏன் குறைக்க வேண்டும். எங்களின் மானியத்தை வழங்க வேண்டும். நாங்கள் துவக்கிய பணிகளை நிறுத்தாமல் மானியத்தை விடுவிக்க வேண்டும்' என்றனர்)
* அமைச்சர் போசராஜு: தற்போது நடந்து வரும் பணிகள் ரத்து செய்யப்படாது. கூடுதல் மானியத்துக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இன்னும் பதில் வரவில்லை. தொடங்கப்படாத பணிகளுக்கான டெண்டர் மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
* காங்., உறுப்பினர் சீதாராம்: சம்பந்தப்பட்ட அமைச்சரை அழைத்து விளக்கம் கேட்பது நல்லது.
* மேலவை துணைத் தலைவர் பிரானேஷ்: உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் டி.சுதாகர் முன்னிலையில் இது தொடர்பாக விவாதிக்க அனுமதி அளிக்கப்படும்.
***

