வர்த்தகத்திற்கு வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் அவசியம்; அமைச்சர் பியூஷ் கோயல்
வர்த்தகத்திற்கு வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் அவசியம்; அமைச்சர் பியூஷ் கோயல்
ADDED : டிச 11, 2025 02:24 PM

புதுடில்லி: வர்த்தகத்திற்கு வெளிப்படைத்தன்மையும், நம்பிக்கையும் மிகவும் அவசியம் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மும்பையில் வர்த்தக நிறுவனத்தின் புதிய கட்டடத்தை மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணைச் செயலாளர் விமல் ஆனந்த் ஆகியோர் திறந்து வைத்தனர்.நிகழ்ச்சியில் அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது; சுங்க வர்த்தக வசதி மையத்தைப் போல, இந்தப் புதிய கட்டடமும் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த நவீன உள்கட்டமைப்பு, வர்த்தகம் செய்யும் முறையை மேம்படுத்தி, நாட்டின் சுயசார்பு திட்டத்திற்கு வலு சேர்க்கும். புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ந்து வரும் ஏற்றுமதி சேவையில் முக்கிய பங்காற்ற வேண்டும்.
இந்தக் கட்டடத்தை கட்டி முடிக்க ஏற்பட்ட தாமதத்துக்குக் காரணமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டட நிபுணர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு விதிமுறையையும் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன். வேலையில் எந்த தாமதமும் இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும். ஊழல் என்பது இருதரப்பில் தொடர்புடையது. யாராவது லஞ்சம் வாங்குகிறார்கள் என்றால், அதை ஊக்குவிக்கும் ஒருவர் இருக்கிறார். ஊழலற்ற அமைப்பை விரும்புபவர்கள் இது பற்றி வெளிப்படையாக பேச வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

