ரூ.57,000 கோடிக்கு மாஸ்டர் பிளான் அமைச்சர் கட்டார் வெளியிட்டார்
ரூ.57,000 கோடிக்கு மாஸ்டர் பிளான் அமைச்சர் கட்டார் வெளியிட்டார்
ADDED : செப் 20, 2025 02:45 AM

புதுடில்லி:தலைநகர் டில்லி மாநகரில் செயல்படுத்தவுள்ள, 'மாஸ்டர் பிளான்' திட்டத்துக்கு மத்திய அரசு 57,000 கோடி ரூபாய் நிதி வழங்கும்,” என, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டார் பேசினார்.
புதுடில்லி முனிசிபல் கவுன்சில் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், டில்லி மாநகருக்கான, மாஸ்டர் பிளானை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோகலால் கட்டார் வெளியிட்டு பேசியதாவது:
அடுத்த 30 ஆண்டுகளில் டில்லி நகரத்தின் வடிகால் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 'மாஸ்டர் பிளான்' எனப்படும் இந்த பெருந்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான நீர் தேக்கப் பிரச்னைகளை தீர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இந்தத் திட்டம் நஜப்கர், பாராபுல்லா மற்றும் டிரான்ஸ் -யமுனா ஆகிய மூன்று படுகைகளாகப் பிரித்து, 57,000 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்தை நிறைவேற்ற ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
டில்லி மாநகரை மேம்படுத்தும் பணியில் பா.ஜ., அரசு அக்கறை செலுத்தி வருகிறது. மாநகர் முழுதும் வடிகால்வாய்களில் தூர்வாரப்பட்டு, மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அங்கு துாய்மைப் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம்.
நாங்கள் ஏ.சி., அறைகளில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வதில்லை. டில்லியை ஆட்சி செய்த முந்தைய அரசு மாநகரின் கழிவுநீர் மற்றும் வடிகால் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை. மக்களுக்கு இலவசங்களை வழங்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டினர்.
இதுபோன்ற திட்டம் கடைசியாக 1976ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. அப்போது டில்லி மக்கள் தொகை ஆறு மில்லியன். ஆனால் இன்று, 20 மில்லியனாக மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இந்த மாஸ்டர் பிளான் காலத்தின் அவசரத் தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., - எம்.பி.,க்கள் மனோஜ் குமார் திவாரி, யோகேந்திர சந்தோலியா, பான்சுரி ஸ்வராஜ், டில்லி அமைச்சர்கள் பர்வேஷ் சாஹிப் சிங், ரவீந்திர இந்திரஜ் சிங் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்.