பீஹாரில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என பொய் சொல்லும் இண்டி கூட்டணி; ராஜ்நாத் சிங் கோபம்
பீஹாரில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என பொய் சொல்லும் இண்டி கூட்டணி; ராஜ்நாத் சிங் கோபம்
ADDED : அக் 29, 2025 02:12 PM

தர்பங்கா; வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்ற இண்டி கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி எப்படி சாத்தியமாகும்? ஏன் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கோபத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பீஹாரில் தர்பங்கா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; பீஹார் மாநிலம் பற்றி ராஷ்டிரிய ஜனதா தளம். நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே அவதூறு செய்தது. அவர்கள் ஒட்டுமொத்த குடும்பம் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
ஒரு முன்னாள் முதல்வர் பல ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டி இருக்கிறது. இது பீஹாரில் உள்ள ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்லவா? முன்னேறிய பீஹாரை உருவாக்க போகிறீர்களா? அல்லது காட்டு ராஜ்ஜியத்தை உருவாக்க போகிறீர்களா என்பதை மக்களே நீங்கள் அனைவரும் முடிவு செய்ய வேண்டும்.
தேர்தல் அறிக்கையை ஆர்ஜேடி வெளியிட்டு உள்ளது. பீஹாரில் உள்ள ஒவ்வொரு வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை என்று வாக்குறுதி அளித்துள்ளனர். இது சாத்தியமா? ராகுல், லாலு பிரசாத், தேஜஸ்வி ஆகியோர் தேர்தலில் உண்மையையே பேசமாட்டார்களா? ஏன் இப்படி பொய்களை சொல்கிறீர்கள்? மக்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்?
இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.

