குக்கே கோவிலில் உறுப்பினர் பதவி 'மாஜி' ரவுடிக்கு அமைச்சர் சிபாரிசு
குக்கே கோவிலில் உறுப்பினர் பதவி 'மாஜி' ரவுடிக்கு அமைச்சர் சிபாரிசு
ADDED : மார் 27, 2025 05:40 AM

மங்களூரு: வரலாற்று பிரசித்தி பெற்ற குக்கே சுப்ரமண்யர் கோவில் நிர்வாக கமிட்டிக்கு, முன்னாள் ரவுடியை அமைச்சர் ஒருவர் சிபாரிசு செய்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தட்சிணகன்னடா, சுள்யாவில் உள்ள குக்கே சுப்ரமண்யர் கோவில், வரலாற்று பிரசித்தி பெற்ற தீர்த்த தலமாகும். குறிப்பாக நாகதோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து பரிகார பூஜை செய்கின்றனர். கர்நாடகாவின் பணக்கார கோவில்களின் பட்டியலில், முதல் இடத்தில் உள்ளது.
கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மாற்றப்படவுள்ளனர். கோவில் வரலாற்றின்படி, ஆதிவாசி மலைக்குடி சமுதாயத்தினர் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். குக்கே சுப்ரமண்யர் கோவில் ரதோற்சவத்தில் இவர்களின் பங்கே அதிகம். எனவே நிர்வாக கமிட்டியில் ஒரு உறுப்பினர் இடம், இந்த சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இம்முறை மலைக்குடி சமுதாயத்தினருக்கு பதிலாக, வேறு ஒருவரை உறுப்பினராக்க முயற்சி நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிராம பஞ்சாயத்து கவுன்சிலரான காங்கிரசின் ஹரிஷ் இஞ்சாடி என்பவர், குக்கே சுப்ரமண்யர் கோவில் நிர்வாக கமிட்டியில், தன்னை உறுப்பினராக்கும்படி பிடிவாதம் பிடிக்கிறார். இவர் முன்னாள் ரவுடி. கோவில் வளாகத்தில் இவருக்கு சொந்தமான, பூஜை பொருட்கள் விற்கும் கடைகள் உள்ளன.
கோவிலுக்கு சொந்தமான தேங்காய் விற்பனை கடைகளை டெண்டர் பெற்று, போலி காசோலை கொடுத்து மோசடி செய்திருந்தார். இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் அளித்த புகாரின்படி, ஹரிஷ் இஞ்சாடி கைதாகி சிறை தண்டனை அனுபவித்தார்.
இப்படிப்பட்டவர், கோவில் நிர்வாக கமிட்டியில் உறுப்பினராக முயற்சிக்கிறார். அமைச்சர் ஒருவருக்கு நெருக்கடி கொடுத்து, தன் பெயரை சிபாரிசு பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.
இதற்கு கோவில் நிர்வாகம், பலத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 'முன்னாள் ரவுடி, கோவிலுக்கு மோசடி செய்தவரை உறுப்பினராக சேர்க்க முடியாது' என, திட்டவட்டமாக கூறுகிறது.
தங்களுக்கு கிடைக்க வேண்டிய உறுப்பினர் பதவியை, வேறு ஒருவருக்கு அளிக்க முற்பட்டிருப்பதால், மலைக்குடி சமுதாயத்தினரும் அதிருப்தியில் உள்ளனர்.