சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு தூக்கு: 61 நாளில் தண்டனை வழங்கிய நீதிமன்றம்
சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு தூக்கு: 61 நாளில் தண்டனை வழங்கிய நீதிமன்றம்
ADDED : டிச 06, 2024 10:17 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற 19 வயது வாலிபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. குற்றம் நடந்த 61 நாளில் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் அக்.,4ம் தேதி 9 வயது சிறுமி, டியூசன் சென்று நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இதனால், அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிசிடிவிக்களை ஆய்வு செய்து, முஸ்தாகின் சர்தார் என்பவனை 2.5 மணி நேரத்தில் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். மேலும் சிறுமியின் உடல் இருந்த இடத்தை காட்டினான்.
விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு 25 நாளில் விசாரணையை முடித்து போக்சோ நீதிமன்றத்தில் அக்.,30ல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இங்கு நவ.,4 ல் விசாரணை துவங்கிய நிலையில், நவ.,26 அன்று 36 சாட்சிகளை விசாரித்து முடித்த நீதிமன்றம், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. குற்றம் நடந்த 61 நாளில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்து உள்ளார்.