ADDED : பிப் 09, 2025 01:28 AM

மூணாறு:கேரள மாநிலம் மூணாறில் குளிர்காலம் முடிவுக்கு வரும் நிலையில் நேற்று வெப்ப நிலை முதன் முறையாக மைனஸ் டிகிரி செல்சியசை எட்டியதால் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மூணாறில் ஆண்டு தோறும் நவம்பரில் குளிர் காலம் துவங்கி பிப்ரவரி வரை நீடிக்கும். பிப்ரவரியில் குளிர் படிப்படியாக குறைந்து விடும். முதன்முறையாக நேற்று வெப்ப நிலை மைனஸ் டிகிரி செல்சியசை எட்டியது. மூணாறு அருகே செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் காலை குறைந்தபட்ச வெப்ப நிலை 'ஜீரோ' டிகிரி இருந்த நிலையில் நேற்று காலை மைனஸ் - 1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. அதனால் அப்பகுதியில் புல் வெளிகளில் உறைபனி படர்ந்து வெண்மையாக காட்சி அளித்தன.
அதேநேரம் தேவிகுளம் 1, சைலன்ட் வாலி, லெட்சுமி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் 2, சிவன் மலை, நல்ல தண்ணி ஆகிய எஸ்டேட்டுகளில் -3 டிகிரி செல்சியஸ் என வெப்ப நிலை பதிவானது.
குளிர் அதிகரித்து உறைபனி ஏற்பட்டதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த காலநிலையை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

