ADDED : ஜூலை 26, 2025 12:30 AM

புதுடில்லி: ஆந்திராவில், ட்ரோனில் இருந்து ஏவுகணையை செலுத்தும் சோதனையை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தில் உள்ள தேசிய திறந்தவெளி சோதனை பகுதியில், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா சிறிய விமானத்தில் இருந்து ஏவுகணையை செலுத்தும் சோதனையை, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தினர்.
இந்த முயற்சிக்கு, யு.எல்.பி.ஜி.எம்., வி - 3 என, பெயரிடப்பட்டுள்ளது. யு.எல்.பி.ஜி.எம்., வி - 2 ஏவுகணையின் மேம்பட்ட வடிவமாக இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டு உள்ளது.
ட்ரோனில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணை, பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், பகல் - இரவு நேரங்களில், இரு வழி சிக்னலுடன் செயல்படும் திறன் உடையது.
பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'யு.எல்.பி.ஜி.எம்., வி - 3 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய டி.ஆர்.டி.ஓ.,வுக்கு பாராட்டுகள். இது நம் ராணுவ திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும்' என, குறிப்பிட்டுள்ளார்.