ம.ஜ.த., மூத்த தலைவர் ஜி.டி. தேவகவுடாவுக்கு 'கல்தா!' குமாரசாமி அதிரடி
ம.ஜ.த., மூத்த தலைவர் ஜி.டி. தேவகவுடாவுக்கு 'கல்தா!' குமாரசாமி அதிரடி
ADDED : அக் 31, 2024 07:38 AM

பெங்களூரு; மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடப்பதையொட்டி, 40 நட்சத்திர பேச்சாளர் பட்டியலை ம.ஜ.த., தலைமை வெளியிட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா பெயர் பட்டியலில் இல்லை. முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக பேசியதால், அவருக்கு குமாரசாமி 'கல்தா' கொடுத்துள்ளார்.
மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி., தேவகவுடா. கட்சியின் மூத்த தலைவரான இவர், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராகவும் உள்ளார். இவருக்கும், கட்சியின் மூத்த தலைவரான மத்திய அமைச்சர் குமாரசாமிக்கும் இடையே அடிக்கடி உரசல் ஏற்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, ம.ஜ.த.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைவதற்கு தேவகவுடா நினைத்தார். ஆனால் அவரை கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா சமாதானப்படுத்தினார்.
வருத்தம்
எனினும், கட்சியின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவராக இருந்தும் தன்னை கேட்டு எந்த முடிவும் எடுப்பதில்லை என்று, குமாரசாமி மீது ஜி.டி.தேவகவுடாவுக்கு வருத்தம் ஏற்பட்டது.
கடந்த 3ம் தேதி மைசூரு தசரா துவக்க விழாவில் பங்கேற்ற ஜி.டி., தேவகவுடா, 'முடா' விவகாரத்தில் முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக பேசினார். “குமாரசாமி மீதும் வழக்குகள் உள்ளன. அவரை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக சொல்ல முடியுமா?” என, எதிர்ப்பு காட்டினார். இது பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, 'சென்னப்பட்டணா தொகுதியில் போட்டியிடும் நிகில் வெற்றி பெறுவாரா?' என, செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு, “எனக்கு எதுவும் தெரியாது,” என்றார்., ஜி.டி.தேவகவுடா. இது குமாரசாமிக்கு மேலும் கோபத்தை கிளப்பியது.
இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலை நேற்று ம.ஜ.த., வெளியிட்டது. இந்த பட்டியலில் கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா, குமாரசாமி, கோலார் எம்.பி., மல்லேஷ்பாபு, எம்.எல்.ஏ.,க்கள் சுரேஷ்பாபு, மஞ்சு, சம்ருதி மஞ்சுநாத், கரேம்மா நாயக், சாரதா, சரண் கவுடா கந்தகூர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பண்டப்பா காசாம்பூர், எச்.கே., குமாரசாமி, மகேஷ், எம்.எல்.சி.,க்கள் ஷரவணா, போஜே கவுடா, பாரூக், ஸ்ரீ கண்ட கவுடா உட்பட கட்சியின் 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.
பட்டியலில் ஜி.டி., தேவகவுடா பெயர் இல்லை. ஆனால் அவரது மகனும், ஹுன்சூர் எம்.எல்.ஏ., ஹரிஷ் கவுடாவின் பெயர் உள்ளது.
வலை விரிக்க...
இதுகுறித்து ம.ஜ.த., தலைவர்கள் கூறுகையில், 'ஜி.டி.தேவகவுடாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருப்பதால், ஓய்வு கொடுக்கும் விதமாக, பிரசாரத்திற்கு அவரை ஈடுபடுத்தவில்லை.
'அவருக்கு பதிலாக அவரது மகன் ஹரிஷ் பிரசாரத்தில் ஈடுபடுவார். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வெற்றி பெறுவோம்' என்றனர்.
ஆனாலும் முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக பேசியதால், ஜி.டி. தேவகவுடாவை கட்சி நடவடிக்கையில் இருந்து குமாரசாமி ஒதுக்கிவைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கட்சித் தலைமை தன்னை ஒதுக்குவதாக ஜி.டி.தேவகவுடா கருதினால், கட்சியில் நீடிப்பாரா அல்லது விலகுவாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
பழைய மைசூரு பகுதி ஒக்கலிக சமூக தலைவரான அவரை இழுக்க காங்கிரசும் வலைவிரிக்க வாய்ப்பு உள்ளது.
காங்கிரசுக்கு அவர் சென்றால், மைசூரில் ம.ஜ.த.,வுக்கு அடி விழும் என்று சொல்லப்படுகிறது.