எம்.எல்.ஏ., அலுவலக பொருட்கள் மாயம் சிசோடியா மீது பா.ஜ., குற்றச்சாட்டு
எம்.எல்.ஏ., அலுவலக பொருட்கள் மாயம் சிசோடியா மீது பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : பிப் 18, 2025 09:41 PM
புதுடில்லி:“பட்பர்கஞ்ச் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் இருந்து நாற்காலிகள், மேஜைகள், டிவிக்கள், ஏ.சி., இயந்திரங்கள் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான பொருட்களை முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா எடுத்துச் சென்று விட்டார்,”என, பட்பர்கஞ்ச் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரவீந்தர் சிங் நேகி கூறினார்.
டில்லி சட்டசபைக்கு 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் பட்பர்கஞ்ச் தொகுதியில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை அவர் பட்பர்கஞ்ச் தொகுதிக்குப் பதிலாக, ஜங்புரா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், பா.ஜ., வேட்பாளர் தர்வேந்தர் சிங் மார்வாவிடம் 675 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், பட்பர்கஞ்ச் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ரவீந்தர் சிங் நேகி கூறியதாவது:
கடந்த 2015ல் பட்பர்கஞ்ச் தொகுதியில் வெற்றி பெற்ற மணீஷ் சிசோடியாவுக்கு பட்பர்கஞ்ச் தொகுதியில் பொதுப்பணித் துறையால் எம்.எல்.ஏ., அலுவலகம் ஒதுக்கப்பட்டது. அந்த அலுவலகத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.
சமீபத்தில், அந்த அலுவலகம் எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு சென்று பார்த்தபோது, அலுவலகத்தில் ஒரு பொருளைக் கூட காணவில்லை.
இந்த அலுவலகத்தில் 250 நாற்காலிகள், டிவிக்கள், ஸ்பீக்கர்கள், சோபாக்கள், மேஜைகள் மற்றும் ஏ.சி.இயந்திரங்கள், மின் விசிறிகள் ஆகியவை வழங்கியதாக பொதுப்பணித் துறை பதிவேட்டில் இருக்கிறது. ஆனால், அனைத்துப் பொருட்களையும் சிசோடியா எடுத்துச் சென்று விட்டார். அரசுக்குச் சொந்தமான பொருட்களை சிசோடியா உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

