சபாநாயகர் தகுதி நீக்கத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் எம்.எல்.ஏ., வழக்கு
சபாநாயகர் தகுதி நீக்கத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் எம்.எல்.ஏ., வழக்கு
ADDED : அக் 17, 2024 09:43 PM

பகர்கஞ்ச்:சபாநாயகரால் தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கர்தார் சிங் தன்வார் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
முந்தைய சட்டசபை தேர்தலில் சத்தர்பூர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு கர்தார் சிங் தன்வார் வெற்றி பெற்றார். கடந்த ஜூலை மாதம் ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறினார்.
ஆம் ஆத்மி அரசில் அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் உடன் சேர்ந்து, பா.ஜ.,வில் கர்தார் சிங் தன்வார் இணைந்தார். இதனால் அவரை கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்து, கடந்த மாதம் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் உத்தரவிட்டிருந்தார்.
சட்டப்பேரவையில் இருந்து தன்னை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் முடிவை எதிர்த்து எம்.எல்.ஏ., கர்தார் சிங் தன்வார், நேற்று முன்தினம் டில்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், 'சபாநாயகரின் முடிவானது தன்னிச்சையானது. அவசரமானது. விளக்கம் அளிக்க எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. என்னை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் செப்டம்பர் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, கர்தார் சிங் தன்வார் கூறியுள்ளார்.
இந்த மனு, இன்று நீதிபதி சஞ்சீவ் நருலா முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கர்தார் சிங் தன்வாரை தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் மனு அளித்த எம்.எல்.ஏ., திலீப் குமார் பாண்டேவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர்கள் நீரஜ், சத்ய ரஞ்சன் ஸ்வைன் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.