கல்வான், சியாச்சினில் அலைபேசி சேவை 18,000 அடியில் 5ஜி சேவை வழங்கி சாதனை
கல்வான், சியாச்சினில் அலைபேசி சேவை 18,000 அடியில் 5ஜி சேவை வழங்கி சாதனை
ADDED : ஏப் 20, 2025 06:18 AM

ஸ்ரீநகர்: இமயமலையின் மீதுள்ள லடாக்கின் கல்வான், சியாச்சின் உள்ளிட்ட பகுதிகளில், '5ஜி' வசதியுடன் கூடிய, அலைபேசி சேவையை வழங்கி, நம் ராணுவம் சாதனை படைத்துள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து, 18,000 அடி உயரத்தில், இமயமலை மீது அமைந்துள்ள பகுதிகளில், முதன் முறையாக அலைபேசி சேவை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, உலகின் மிக உயரமான போர்க்களமான, சியாச்சின் பனிப்பாறையில் 5ஜி அலைபேசி கோபுரத்தை வெற்றிகரமாக அமைத்திருப்பது வரலாற்று சாதனையாகும்.
இது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நம் ராணுவ வீரர்களுக்கு வரப்பிரசாதமாகும்.
இது பற்றி நம் ராணுவம் கூறியதாவது:
லடாக் பிராந்தியத்தின் டி.பி.ஓ., கல்வான், டெம்சோக், சுமர், படாலிக், டிரஸ், சியாச்சின் பனிப்பாறை உள்ளிட்ட இடங்களில் 4ஜி, 5ஜி வசதிகளுடன் கூடிய அலைபேசி சேவை வழங்கப்படுகிறது. இதற்காக வலுவான, 'பைபர் ஆப்டிகல்' கேபிள் உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் லடாக், கார்கில் ஆகிய மாவட்டங்களில் நான்கு முக்கிய கோபுரங்கள் உட்பட ஏராளமான அலைபேசி கோபுரங்களை ராணுவம் கட்டமைத்துள்ளது. இதனால், 18,000 அடி உயரத்தில், தனிமையில் இருக்கும் நம் வீரர்களுக்கு மன உறுதி அளிப்பதோடு, குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவும் உதவும் என்றனர்.

