தமிழகத்துக்கு நவீன எஸ்.இ.டி.சி., பஸ்கள் பயணியருக்காக படுக்கை வசதியில் மாற்றம்
தமிழகத்துக்கு நவீன எஸ்.இ.டி.சி., பஸ்கள் பயணியருக்காக படுக்கை வசதியில் மாற்றம்
ADDED : அக் 10, 2024 06:27 AM

பெங்களூரு: அதிநவீன வசதிகளுடன் தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு, எஸ்.இ.டி.சி., அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரில் வசிக்கும் தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, எஸ்.இ.டி.சி., எனும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பெங்களூரு சாந்திநகரில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
'ஏசி' ஸ்லீப்பர், 'ஏசி' அல்லாத படுக்கை வசதி கொண்ட பஸ்கள், செமி ஸ்லீப்பர் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் பி.எஸ்.4 ரகத்தை சேர்ந்தது. வெள்ளை நிறத்தில் இருக்கும்.
இந்நிலையில் எஸ்.இ.டி.சி., நிர்வாக இயக்குனர் ஆர்.மோகன், நீண்ட துாரம் செல்லும் பஸ்களில், அதிநவீன வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்தார். அதன்படி பி.எஸ்.6 ரக பஸ்கள் வாங்கப்பட்டன. இந்த பஸ்கள், பச்சை நிறம் கொண்டவை.
குஷன் இருக்கை
பெங்களூருக்கு மட்டும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் ஒதுக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பஸ்கள் ஈரடுக்கு படுக்கை வசதி கொண்டவை. புதிய பஸ்களில் உள்ள வசதிகள் குறித்து, பெங்களூரு சாந்திநகர் எஸ்.இ.டி.சி., பொறுப்பாளர் அண்ணாமலை கூறியாவது:
இரவில் நீண்ட துார பயணம் மேற்கொள்ளும் பயணியர், பஸ்களில் நன்றாக அயர்ந்து துாங்கி செல்ல வேண்டும் என்று நினைப்பர். இதற்காக எஸ்.இ.டி.சி., படுக்கை வசதி கொண்ட பஸ்களை அறிமுகப்படுத்தி உள்ளது; பயணியரிடம் வரவேற்பு கிடைத்தது. இப்போது அதிநவீன வசதிகளுடன் கூடிய, பி.எஸ்.,6 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களில் அலுவலகங்களில் இருப்பது போன்று, குஷன் இருக்கை அமைக்கப்பட்டு உள்ளது. பயணம் செய்வோர் இருக்கையின் பட்டனை அழுத்தி, இருக்கையில் நன்றாக சாய்த்து கொள்ளலாம். நன்றாக கால் நீட்டி செல்ல இட வசதியும் உள்ளது.
பழைய பஸ்களில் ஓரடுக்கு படுக்கை வசதி மட்டும் இருந்தது. முதியோர்கள், மாற்று திறனாளிகளால் உயரமான படுக்கையில், ஏற முடியாமல் கஷ்டப்படுவதை கருத்தில் கொண்டு, புதிய பஸ்களில் கீழ்தளத்திலும் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 20 படுக்கை வசதி இருக்கைகள் உள்ளன. இதில் 10 சிங்கிள் படுக்கை இருக்கைகள். ஐந்து இரட்டை படுக்கை வசதி இருக்கைகள்.
எல்.இ.டி., லைட்
பயணியர் இருக்கை மேல், எல்.இ.டி., லைட்டுகள் பொருத்தப்பட்டு உள்ளன.
படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் மேல், சிறிய மின்விசிறி, லக்கேஜ் வைக்க இடம், மொபைல் சார்ஜிங் வசதி உள்ளது. பழைய பஸ்களில் ஏர் சஸ்பென்சர் பஸ்களின் பின்பக்கம் இருக்கும். ஆனால் புதிய பஸ்களில், இருபக்கமும் ஏர் சஸ்பென்சர் பொருத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் பள்ளங்கள், வேகத்தடைகளில் ஏறி இறங்கும் போது, துாங்கி கொண்டு இருக்கும் பயணியருக்கு, எந்த இடைஞ்சலும் ஏற்படாது.
முன்பக்கம் ஏர் சஸ்பென்சர் இருப்பது டிரைவர்களுக்கு அனுகூலமாக உள்ளது. நிறுத்தங்கள் வரும் போது பயணியரை உஷார்படுத்த, ஸ்டியரிங் அருகில் மைக் வசதி உள்ளது. விபத்து நேரத்தில் அவசர கால வழியை திறக்க, சுத்தியல்களும் பொருத்தப்பட்டு உள்ளன.
பழைய பஸ்களில் எல்.இ.டி., பெயர் பலகை, இடதுபுறம் ஓரமாக இருக்கும். இதனால் இடதுபுறம் பார்க்க டிரைவர்களுக்கு சிரமமாக இருந்தது. புதிய பஸ்சில் எல்.இ.டி., பலகை சற்று உயரமாக பொருத்தப்பட்டு உள்ளது.
ஒரே கட்டணம்
பயணியர் வசதிக்காக இந்த பஸ்களை, நிர்வாக இயக்குனர் ஆர்.மோகன் வாங்கி இருக்கிறார். புதிய பஸ்களில் பயணம் செய்யும் பயணியர், ஆம்னி பஸ்களுக்கு இணையாக, தமிழக அரசு பஸ்களும் உள்ளதே என்று கூறுகின்றனர்.
இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பெருமை நிர்வாக இயக்குனரை தான் சென்றடைய வேண்டும்.
பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துகின்றன. ஆனால் எங்களிடம் எப்போதும் ஒரே கட்டணம் தான்.
குறைந்த கட்டணத்தில் பயணியருக்கு நிறைவான சேவை அளிப்பது, தமிழக அரசின் நோக்கம். பயணியர் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.