ADDED : மார் 19, 2024 11:30 PM

பாலக்காடு:கேரள மாநிலம் பாலக்காடில், நேற்று நடந்த ரோடு ஷோவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மக்கள் மலர் துாவி வரவேற்பு அளித்தனர்.
கேரள மாநிலத்தில், பா.ஜ., லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, நேற்று காலை, 10:25 மணிக்கு, கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் பாலக்காடு வந்த பிரதமர் மோடிக்கு, மெர்சி கல்லுாரி மைதானத்தில், பா.ஜ.,வின் கேரள மாநில பொறுப்பாளர் பிரகாஷ் ஜாவடேகர், மாநில தலைவர் சுரேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கிருந்து, ரோடு ஷோ துவங்கும் இடமான கோட்டை மைதானம் ஐந்து விளக்கு பகுதிக்கு காரில் வந்தார். அப்போது, ரோட்டின் இருபக்கமும் பொதுமக்கள், கட்சியினர் திரளாக நின்று பலத்த கோஷமிட்டு வரவேற்றனர்.
'பாரத் மாதா கி ஜெய்,பிரதமர் நரேந்திரமோடிக்கு ஜெய்' என தொண்டர்கள் கோஷம் எழுப்ப, ரோடு ஷோ நிகழ்ச்சி, 10:45 மணிக்கு துவங்கியது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த காரில், பிரதமர் மோடி நின்று பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவித்து கையசைத்தவாறு சென்றார்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் காத்திருந்த தொண்டர்கள், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரதமரை மலர் துாவி வரவேற்றனர்.
பிரதமருடன் கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன், பாலக்காடு மற்றும் பொன்னானி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களான கிருஷ்ணகுமார், நிவேதிதா ஆகியோர் வாகனத்தில் இருந்தனர்.
வழித்தடத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தி கண்காணித்தனர். கோட்டை மைதானம் ஐந்து விளக்கில் இருந்து, சுல்தான்பேட்டை வழியாக தலைமை தபால் அலுவலகம் வரை,1 கி.மீ., துாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரோடு ஷோவில், பிரதமர் பயணித்தார்.
பகல், 11:20 மணிக்கு ரோடு ஷோ நிறைவடைந்தது. அங்கிருந்து ஹெலிகாப்டரில் சேலம் சென்றார்.

