நிதிஷ் குமாரை புகழ்ந்து தள்ளும் மோடி; முதல்வர் வேட்பாளராக அறிவிக்காதது ஏன்
நிதிஷ் குமாரை புகழ்ந்து தள்ளும் மோடி; முதல்வர் வேட்பாளராக அறிவிக்காதது ஏன்
UPDATED : ஜூலை 23, 2025 04:07 AM
ADDED : ஜூலை 23, 2025 02:20 AM

'காட்டாட்சியில் இருந்து பீஹாரை விடுவித்தவர் யார் எனக் கேட்டால் சட்டென வரும் பெயர் நிதிஷ் குமார் தான்... அதே போல், வளர்ச்சி பாதையை நோக்கி பீஹாரை அழைத்துச் சென்றவரும் நிதிஷ் குமார் தான்' என, சமீபத்தில் புகழ்ந்து தள்ளினார் பிரதமர் மோடி.
இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் பீஹாருக்கு, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு முறை, 'விசிட்' அடித்தார் பிரதமர். இரு முறையும் நிதிஷ் குமாரின் புகழ்பாட பிரதமர் மறக்கவில்லை.
அதே சமயம் தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் தான் என்பதை பிரதமர் மோடி வெளிப்படையாக தெரிவிக்காதது, பீஹார் அரசியலில் பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டிருக்கிறது.
குழப்பம்
கடந்த, 2010 மற்றும் 2020ல் நடந்த சட்டசபை தேர்தல்களின் போது, தே.ஜ., கூட்டணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர் நிதிஷ். அந்த இரு தேர்தல்களிலும் முதல்வர் முகமாக பார்க்கப்பட்டவரும் அவரே.
இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் சட்டசபை தேர்தலையும், நிதிஷ் குமார் தலைமையிலேயே சந்திக்க வேண்டும் என்ற முனைப்பில் தே.ஜ., கூட்டணி தலைவர்கள் இருக்கின்றனர்.
ஆனால், இந்த முறை நிதிஷ் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை பிரதமர் மோடியோ, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவோ இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இதனால், தே.ஜ., கூட்டணிக்குள் ஒரு குழப்பமான சூழல் நிலவுகிறது. நிதிஷை வைத்து தேர்தலில் வெற்றி பெற்ற பின், அவரை அப்படியே கழட்டிவிட பா.ஜ., எண்ணுகிறதா என்ற சந்தேகமும் கூட்டணிக்குள் வலுவாக எழுந்திருக்கிறது.
ஐக்கிய ஜனதா தளத்தில் நிதிஷுடன் நெருக்கமாக இருப்பவர்களால் கூட, பா.ஜ.,வின் அடுத்த கட்ட நகர்வை கணிக்க முடியவில்லை. அதே சமயம் பீஹாரில் பா.ஜ., தன் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டுமெனில், நிதிஷ் குமாரை சுமப்பது காலத்தின் கட்டாயம் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
கடந்த, 2020 சட்டசபை தேர்தலின்போது, பிரதமர் மோடியும், நிதிஷும் கூட்டாக பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட பா.ஜ.,வால் 19.8 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற முடிந்தது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 74 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
அரசியல் கணக்கு
ஆனால், எதிர்க்கட்சி முகாமில் தனி நபராக ஆர்.ஜே.டி.,யின் தேஜஸ்வி யாதவ் பிரசாரத்தில் இறங்கினார். ஆர்.ஜே.டி 23.5 சதவீத ஓட்டுகள் பெற்று 75 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 15.7 சதவீத ஓட்டுகளுடன் 43 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இதனால் தே.ஜ., கூட்டணி அரசில் பா.ஜ.,வுக்கு இரு துணை முதல்வர்களை நிதிஷ் விட்டு தர நேர்ந்தது.
இதனை நினைவுகூர்ந்துள்ள அரசியல் நிபுணரான அஜய் குமார், ''கடந்த காலங்களை மையப்படுத்தியே ஒவ்வொரு தேர்தலிலும், கூட்டணியும், அரசியல் கணக்குகளும் மாறுபடும்,'' என்றார்.
பீஹார் அரசியலை 30 ஆண்டுகளாக உற்று நோக்கி வரும் மற்றொரு அரசியல் நிபுணரான கிரிதர் ஜா, ''ஒவ்வொரு தேர்தலிலும், நிதிஷ் பெயரை பயன்படுத்தி வெற்றியை ஈட்ட வேண்டும் என்றே பா.ஜ., விரும்புகிறது,'' என்றார்.
துருப்புச்சீட்டு
பீஹாரின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 36 சதவீதம் பேர் மிகவும் பின்தங்கியவர்கள். அவர்களின் ஓட்டுகளை நிதிஷ் குமார் கணிசமாக வைத்திருக்கிறார்.
தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்களில் அவர்களுக்காகவே பல்வேறு நலத்திட்டங்களை நிதிஷ் அறிவிப்பது தான், மிகவும் பின்தங்கியவர்களின் ஓட்டுகளை அவர் கணிசமாக அறுவடை செய்ய காரணம் என்கிறார் கிரிதர் ஜா.
இது தவிர, தற்போது மாநில அரசுப் பணிகளில் 35 சதவீத இட ஒதுக்கீடு பீஹார் பெண்களுக்கே என்ற அறிவிப்பும் நிதிஷ் குமாருக்கு இந்த தேர்தலில் பெரிதும் கைகொடுக்கும் என கூறப்படுகிறது.
எனவே, வரும் சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெறுவதற்கான முக்கிய துருப்பு சீட்டே நிதிஷ் தான். இதனால், நிதிஷுக்கு பெரிய பதவி கொடுத்து அமர வைக்க பா.ஜ., திட்டம் போடுகிறது.
- நமது சிறப்பு நிருபர் -