நாங்கள் வெற்றிப்பெறாத தொகுதியில் கூட பா.ஜ., திணறுகிறது: சொல்கிறார் ஜெய்ராம் ரமேஷ்
நாங்கள் வெற்றிப்பெறாத தொகுதியில் கூட பா.ஜ., திணறுகிறது: சொல்கிறார் ஜெய்ராம் ரமேஷ்
ADDED : மே 07, 2024 11:22 AM

புதுடில்லி: ''ஜூன் 4ம் தேதிக்கு பிறகு மோடி, முன்னாள் பிரதமராக ஆகிவிடுவார். அவரை மக்கள் ஆட்சியில் இருந்து வெளியேற்றுவார்கள் என்பதும் அவருக்கு (மோடிக்கு) தெரியும்'' என்றும், ''1984க்கு பிறகு நாங்கள் வெற்றிப்பெறாத தொகுதியில் கூட பா.ஜ., திணறுகிறது'' எனவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: முதல்கட்ட லோக்சபா தேர்தலுக்கு பிறகு, இண்டியா கூட்டணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கும் எனத் தெளிவாகிவிட்டது. இன்று நடைபெறும் 3ம் கட்ட தேர்தலுக்கு பிறகும் அதே நிலை தான் இருக்கும். 1984க்கு பிறகு குஜராத்தின் சூரத் தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்றதே இல்லை. அங்கு காங்கிரஸ் வேட்பாளரை மிரட்டியதால் வலுக்கட்டாயமாக வேட்புமனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர். சுயேட்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்களையும் வாபஸ் பெற வைத்தனர்.
1984ல் இருந்து நாங்கள் வெற்றிப்பெறவில்லை என்றாலும் அவர்கள் வெற்றிப்பெற திணறுகின்றனர்; இந்த குறுக்குவழியை தேர்ந்தெடுத்தனர். இதுவே அங்குள்ள களநிலவரத்தை காட்டுகிறது. ஜூன் 4ம் தேதிக்கு பிறகு மோடி, முன்னாள் பிரதமராக ஆகிவிடுவார். அவரை மக்கள் ஆட்சியில் இருந்து வெளியேற்றுவார்கள் என்பதும் அவருக்கு (மோடிக்கு) தெரியும். ஜூன் 4க்கு பிறகு பிரதமராக இருக்க மாட்டார் என்பதால், இப்போதே அவர் பதவியில் நன்றாக உட்கார்ந்துக்கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார்.