2029லும் மோடி நம்மை வழி நடத்துவார்: அமித்ஷா நம்பிக்கை
2029லும் மோடி நம்மை வழி நடத்துவார்: அமித்ஷா நம்பிக்கை
ADDED : மே 15, 2024 05:08 PM

புதுடில்லி: 2029ம் ஆண்டிலும் பிரதமர் மோடி நம்மை வழிநடத்துவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:
பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உள்ளது. அந்நாட்டிற்கு மரியாதை அளிக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கேட்கக்கூடாது என பரூக் அப்துல்லாவும், காங்கிரஸ் தலைவர்களும் கூறுகின்றனர். 130 கோடி மக்களுடன், அணு ஆயுதம் வைத்து இருக்கும் இந்தியா, பயந்து கொண்டு தனது உரிமையை விட்டுக் கொடுக்க முடியமா? தங்களது கூட்டணி தலைவர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை நாட்டு மக்களிடம் ராகுல் விளக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை வீட்டுக் கொடுக்க முடியாது.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ‛ இண்டியா' கூட்டணியினர் புறக்கணித்தனர். அவர்கள் தங்களின் சிறுபான்மையினர் ஓட்டு வங்கிக்கு பயந்து இப்படி செய்தனர் என்பது எனது குற்றச்சாட்டு. ரம்ஜான் அன்று, எதிர்க்கட்சியினர் முஸ்லிமாக இல்லாவிட்டாலும், முஸ்லிம் சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடுவது நேரம் செலவிடுவதில் அவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், ஹிந்துவாக இருந்தாலும், முஸ்லிம் ஓட்டு வங்கி அதிருப்தி அடைவர் என்ற காரணத்தினால், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள். என்ன மாதிரியான அரசியல் இது.
மம்தா பானர்ஜி புது வகையான நடவடிக்கையை துவக்கி வைத்துள்ளார். முதலில் அட்டூழியத்தை செய்த பின்னர், அது குறித்து பேசுபவர்கள் மீது அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகிறார். சந்தேஷ்காலி சம்பவம் இதற்கு சிறந்த உதாரணம். பெண் முதல்வரின் ஆட்சியின் கீழ், மதத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக அட்டூழியம் நடந்தது. அவர் அமைதியாக உள்ளார். உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகும், மேற்கு வங்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பிறகு தான் வழக்கு சிபிஐக்கு சென்றது. இதற்கு மம்தா வெட்கப்பட வேண்டும்.
இன்று 300 பேருக்கு, சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும். சிஏஏ சட்டம் பெரிய சட்டம். மேற்கு வங்கத்தில் 24 - 30 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு அமித்ஷா அளித்த பதிலில், இது வழக்கமான தீர்ப்பு அல்ல என்பது எனது நம்பிக்கை. சிறப்பு சலுகை வழங்கப்பட்டு உள்ளதாக சிலர் கருதுகின்றனர். 2029 வரை பிரதமர் ஆக மோடி நீடிப்பார். கெஜ்ரிவாலுக்கு நான் சொல்லும் செய்தி, 2029க்கு பிறகும் மோடி நம்மை வழிநடத்துவார். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

