கயானா, டொமினிகா நாடுகளின் உயரிய விருதுகளை பெற்றார் மோடி
கயானா, டொமினிகா நாடுகளின் உயரிய விருதுகளை பெற்றார் மோடி
ADDED : நவ 22, 2024 01:44 AM

ஜார்ஜ்டவுன், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு உதவிகள் செய்ததற்காகவும், இரு கரீபிய நாடுகளுடன் உறவை வலுப்படுத்தியதற்காகவும், கயானா மற்றும் டொமினிகா நாடுகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் நாட்டின் உயரிய விருதுகளை அளித்து கவுரவித்து உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா மற்றும் தென் அமெரிக்க நாடான பிரேசில் பயணங்களை முடித்து, கரீபிய நாடான கயானா சென்றார்.
தடுப்பூசி
அந்நாட்டு அதிபர் இர்பான் அலியை நேற்று சந்தித்து பேசினார். இந்தியா - கயானா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், கயானாவுக்கு தடுப்பூசி உட்பட பல்வேறு மனிதாபிமான உதவிகளை இந்தியா அளித்தது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மட்டுமின்றி, சர்வதேச சமூகத்திற்கு மோடி அளித்து வரும் பங்களிப்பு மற்றும் கயானா உடனான உறவை வலுப்படுத்த அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டி, அந்நாட்டின், 'தி ஆர்டர் ஆப் எக்சலென்ஸ்' என்ற உயரிய விருதை, அதிபர் இர்பான் அலி, பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.
இந்த விருதை பெறும் நான்காவது உலக தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுஉள்ளார்.
நன்றி
முன்னதாக, 'இந்தியா - காரிகோம்' மாநாட்டில், கரீபிய தீவு நாடான டொமினிகாவின் உயரிய தேசிய விருதான, 'டொமினிகா அவார்ட் ஆப் ஹானர்' என்ற விருது பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்டது.
இந்த இரு விருதுகளுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, 'இது, 140 கோடி இந்தியர்களுக்கு அளிக்கப்பட்ட கவுரவம்' என, குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று பரவலின் போது, டொமினிகாவுக்கு 70,000 ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசிகளை இந்தியா, 2021ல் அளித்து உதவியது.