ADDED : டிச 05, 2024 01:10 AM

புதுடில்லி, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் டில்லியில் தன் வீட்டு தோட்டத்தில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த போது, அவரை நோக்கி வந்த குரங்கு, குளிருக்கு இதமாக அவரை கட்டியணைத்தபடி உறங்கியது. இந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சசி தரூர். இவர், பார்லிமென்ட் கூட்டத் தொடருக்காக டில்லியில் உள்ள தன் இல்லத்தில் தங்கியுள்ளார்.
நேற்று காலை வீட்டின் தோட்டத்தில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரை நோக்கி வந்த குரங்கு, தாவிக் குதித்து அவரது மடியில் ஏறி அமர்ந்தது.
தரூர் அளித்த இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டு விட்டு, டில்லியின் காலை குளிருக்கு இதமாக, சசி தரூரை அணைத்தபடி, அந்த குரங்கு குட்டித் துாக்கம் போட்டது.
இந்த புகைப்படங்களை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து சசி தரூர், 'இன்று நடந்தது ஒரு ஆச்சரியமான அனுபவம்.
என் மடியில் படுத்து உறங்கிய குரங்கு நான் எழுந்ததும், குதித்து ஓடிவிட்டது. குரங்கு கடித்தால் ரேபிஸ் ஊசி போட வேண்டுமே என்ற அச்சம் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. எங்கள் சந்திப்பு மகிழ்ச்சியாக அமைந்தது' எனக் குறிப்பிட்டார்.