ADDED : செப் 28, 2025 07:30 AM

பெங்களூரு : கர்நாடகாவில், நவம்பர் மாதத்தில் இருந்து, 5,000 அங்கன்வாடி பள்ளிகளில், மான்டஸோரி கல்வி முறையை துவக்க, மாநில அரசு தயாராகி வருகிறது.
கர்நாடகாவில் 69,922 அங்கன்வாடி பள்ளிகள் உள்ளன. இதில் மூன்று முதல் ஆறு வயதுக்கு உட்பட்ட 16 லட்சம் குழந்தைகள் கல்வி கற்கின்றனர்.
சோதனை அடிப்படையில் கடந்தாண்டு பெங்களூரில் 250 அங்கன்வாடி பள்ளிகளில் மான்டஸோரி வகுப்புகள் திறக்கப்பட்டன. அப்போது 2,550 குழந்தைகள் சேர்க்கப்பட்டனர். இந்தாண்டு 3,950ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால், 'குஷி' அடைந்துள்ள பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு துறை, இத்திட்டத்தை மாநிலம் முழுதும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.
துறை தகவலின்படி, நவம்பர் மாதம் முதல் 5,000 அங்கன்வாடி பள்ளிகளில் மான்டஸோரி கல்வி முறையை துவக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கட்டடங்கள் உட்பட தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால், 7,000 மான்டஸோரி கல்வி முறையை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மாணவர்களுக்கு பாடம் எடுக்க கன்னடம், ஆங்கில வழிக்கல்வி கற்பிப்பதற்காக, பி.யு.சி., பட்டப்படிப்பு, முதுகலை படித்த தகுதி வாய்ந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நகரங்கள், கிராமங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கன்வாடி பள்ளிகளில் மான்டஸோரி துவக்கப்பட்டால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நடுத்தர குடும்பத்தினர், அதிக கட்டணத்துடன் தனியார் நர்சரிகளை நோக்கி செல்வது தவிர்க்கப்படும் என துறை வட்டாரங்கள் கூறுகின்றன.