'மூடா' முறைகேடு பண மோசடி வழக்கு: ரூ.40 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
'மூடா' முறைகேடு பண மோசடி வழக்கு: ரூ.40 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
ADDED : அக் 06, 2025 05:22 PM

புதுடில்லி: 'மூடா' முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு தாலுகா, வருணா அருகே சித்தராமயனஹுண்டி கிராமம். 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, சித்தராமையா மீது அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், 34 அசையா சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான தற்காலிக உத்தரவை அமலாக்கத்துறை பிறப்பித்துள்ளது.
முடக்கப்பட்டிருக்கும் சொத்துகளின் மதிப்பு ரூ. 40.08 கோடி என்று அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணையில் இதுவரை ரூ. 400 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே, இந்த வழக்கின் கமிஷனர் ஜி.டி. தினேஷ் குமாரை அமலாக்கத்துறை செப்டம்பரில் கைது செய்தது. தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.