பஞ்சாப் டிஐஜி வீட்டில் 7.5 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்க நகை சிக்கியது
பஞ்சாப் டிஐஜி வீட்டில் 7.5 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்க நகை சிக்கியது
ADDED : அக் 17, 2025 08:55 PM

சண்டிகர்: லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட டிஐஜி வீட்டில் 7.5 கோடி ரொக்கம் மற்றும் 2.5 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மிரட்டல்
பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி ரூப் நகர் மற்றும் பதேகார்க் சாகிப் மாவட்டங்களை உள்ளடக்கியது ரூபார் சரகம். இந்த சரக டிஐஜியாக இருப்பவர் ஹர்சரண் புல்லார். இவர் அம்மாநில முன்னாள் டிஜிபி எம்எஸ் புல்லார் என்பவரின் மகன் ஆவார். பதேகார்க் சாகிப் மாவட்டத்தின் மண்டி கோபிந்த் கர்க் பகுதியை சேர்ந்த பழைய பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள ஆகாஷ் பட்டா என்பவர் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், இது பொய்க்குற்றச்சாட்டு என அவர் கூறி வருகிறார். இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் விடுவிப்பதற்கு ஹர்சரண் புல்லார் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், மாதம் மாதம் லஞ்சம் தராவிட்டால் பொய் வழக்கு போடுவதாகவும் மிரட்டி உள்ளார்.
பறிமுதல்
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆகாஷ் பட், சிபிஐயில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து ஹர்சரண் புல்லாரை சிபிஐ அதிகாரிகள் மறைந்திருந்து கண்காணித்து வந்தனர். தொடர்ந்து கிரிஷாணு என்ற இடைத்தரகர் மூலம் ரூ.8 லட்சம் லஞ்சம் வாங்கிய ஹர்சரண் புல்லாரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இடைத்தரகரிடம் இருந்து ரூ.21 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மறுப்பு
இதனிடையே ஹர்சரண் புல்லார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது நிருபர்களை சந்தித்த ஹர்சரண் புல்லார், '' தன் மீதான குற்றச்சாட்டு பொய். வேண்டும் என்றே சிக்க வைக்கப்பட்டேன்'' எனத் தெரிவித்து இருந்தார்.
தொடரும் சோதனை
ஹர்சரண் புல்லார் தொடர்பான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் 5 கோடி ரொக்கப்பணம், 1.5 கிலோ தங்கம், அசையா சொத்து ஆவணங்கள் மற்றும் பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்ததாகத் தெரிவித்திருந்தனர் இருந்தனர்.
இந்த சோதனை தொடர்ந்த நிலையில், அவரிடம் இருந்து 7.5 கோடி ரொக்கப்பணம், 2.5 கிலோ எடை கொண்ட தங்க நகைகள், 26 சொகுசு வாட்சுகள், குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவிகள், பல வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.