ADDED : பிப் 01, 2025 02:05 AM
மூணாறு:இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே பிறந்து 38 நாட்கள் ஆன ஆண் சிசு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததால், தாயார் கை நரம்பை துண்டித்து தற்கொலைக்கு முயன்றார்.
கேரளா தொடுபுழா அருகே பூச்சப்புரா பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு 7 மாத குறை பிரசவத்தில் 1.3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்தது. தாய் குழந்தையுடன் கூவக்கண்டத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் பிறந்து 38 நாட்களே ஆன சிசுவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தது. தாய்ப்பால் கொடுக்கும்போது மூச்சுத்திணறலால் குழந்தை இறந்து இருக்கலாம் என நினைத்த தாயார் தனது கை நரம்பை துண்டித்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குழந்தைக்கு பிறந்த நாள் முதல் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடல் உறுப்புகள் ஆய்வுக்கு பிறகு இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.