அன்று விமர்சனம், இன்று பாராட்டு: ஜெலன்ஸ்கி பேட்டியில் அரங்கேறிய ஒரு 'உடை' சுவாரஸ்யம்
அன்று விமர்சனம், இன்று பாராட்டு: ஜெலன்ஸ்கி பேட்டியில் அரங்கேறிய ஒரு 'உடை' சுவாரஸ்யம்
ADDED : ஆக 19, 2025 07:04 AM

வாஷிங்டன்: உடை விவகாரத்தில் உக்ரைன் அதிபரை விமர்சித்த டிரம்ப் ஆதரவு நிருபரின் திடீர் பாராட்டு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பொதுவாக உலக நாடுகளின் தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு என்பது சர்வதேச அரசியலில் அதிக கவனம் பெறும். குறிப்பாக அமெரிக்க அதிபருடன் யார் சந்திப்பு நிகழ்த்தினாலும் மேலைநாடுகளில் செய்தித்தாள், ஊடகங்களில் அதுதான் அதி முக்கிய செய்தி.
உக்ரைன் ரஷ்யா போர்ச்சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்த நிகழ்வும் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியது. அப்படி ஒரு சந்திப்பு இந்த ஆண்டு பிப்ரவரியில் நிகழந்த போது, ஜெலன்ஸ்கியின் உடை விஷயம், டிரம்ப் ஆதரவு நிருபர் பிரைய்ன க்ளென்னாபொட் என்பவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதிபரை சந்திக்கும் போது இப்படித்தான் சூட் (suit) அணியாமல், வேறு ஆடை அணிவதா என்றும் நிருபர் கேள்வி எழுப்பி இருந்தார்.
அப்போதைய நிருபர்களின் சந்திப்பின் போது உடன் இருந்த டிரம்பும் இதையே தான் நானும் அவரிடம்(ஜெலன்ஸ்கி) சொன்னேன் என்று கூற இந்த சம்பவம் மேலைநாட்டு ஊடகங்களில் பேசு பொருளாக மாறியது.
இந் நிலையில், டிரம்புடன் நேற்றைய சந்திப்புக்கு பின்னர், ஜெலன்ஸ்கி மீண்டும் நிருபர்களை சந்தித்தார். அப்போது பிரைய்ன் க்ளென்னாபொட் என்ற நிருபர் (இவர் தான் ஜெலன்ஸ்கியின் ஆடையை விமர்சித்தவர்) முதலில் நீங்கள்(ஜெலன்ஸ்கி) அற்புதமாக தெரிகிறீர்கள். இன்று அணிந்திருக்கும் கருப்பு நிற சட்டை,மேல் கோட் ஆடையில் அற்புதமாக காணப்படுகிறீர்கள் என்று பாராட்டினார். பின்னர் பிப்ரவரி மாதம் நிகழ்ந்த சந்திப்பில் தாம் விமர்சித்ததற்கு தமது வருத்தத்தையும் பதிவு செய்தார்,
அதை ஏற்றுக் கொண்ட ஜெலன்ஸ்கி நீங்களும் அதே உடையில் இருக்கிறீர்கள் என்று பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர், ரஷ்யாவுடன் போர் உடன்படிக்கை ஏற்பட்ட பின்னர், நான் தேர்தல்களை நடத்த உள்ளேன். பாதுகாப்பான சூழலில் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.