ADDED : டிச 04, 2024 11:56 PM

புதுடில்லி : டில்லியில் வீடு புகுந்து மர்ம நபர்கள் சிலர், ஒரே குடும்பத்தைச் சேர்த்த தாய், தந்தை உட்பட மூவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டில்லியில் உள்ள நெப்சராய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார், 51; ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றதை அடுத்து, தற்போது செக்யூரிட்டி அதிகாரியாக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி கோமள், 46. இவர்களுக்கு கவிதா, 23, என்ற மகளும்; அர்ஜுன் என்ற மகனும் உண்டு.
இந்நிலையில், நேற்று அதிகாலை அனைவரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். மகன் அர்ஜுன் வாக்கிங் சென்றிருந்தார்.
வாக்கிங் முடித்து அர்ஜுன் வீடு திரும்பிய போது, பெற்றோர் மற்றும் சகோதரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
மூவரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் மர்ம நபர்கள் ராஜேஷ் வீட்டிற்குள் புகுந்து மூவரையும் கொலை செய்தது தெரிய வந்தது.
இந்த கொலைக்கு, கடன் பிரச்னை காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.