சுட்டெரித்த நெருப்பில் இருந்து சேயை காப்பாற்றிய தாய்; ஆமதாபாத் விமான விபத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம்
சுட்டெரித்த நெருப்பில் இருந்து சேயை காப்பாற்றிய தாய்; ஆமதாபாத் விமான விபத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம்
ADDED : ஜூலை 29, 2025 01:07 AM

ஆமதாபாத்: தீக்குள் விரலை விட்டாலே துடித்து போவோம்! ஆலையில் இருக்கும் உலை போல தகிக்கும் வெப்பத்துடன் தீ கனன்று எரிந்தால் என்ன ஆகும். அப்படியான சூழலிலும், பிள்ளையை காப்பாற்ற, தன் உடலையே கேடயமாக மாற்றியும், புராணக் கதையில் வரும் மன்னர் சிபி சக்கரவர்த்தி போல சதையை அறுத்து கொடுத்தும் வாழும் தெய்வமாக திகழ்கிறார் ஒரு தாய்.
கரும்புகை சமீபத்தில், ஆமதாபாதில் நடந்த விமான விபத்தின்போது தான் இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே, அருகில் இருந்த மருத்துவ விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தோர், விடுதியில் தங்கியிருந்தோர் என 260 பேர் உயிரிழந்தனர்.
விமானம் விபத்துக்குள்ளானபோது விடுதியில் தங்கியிருந்த மணிஷா கச்சாடியா, அவரது 8 மாத பச்சிளம் குழந்தை தியான்ஷும் சிக்கிக் கொண்டனர்.
கணவரான கபில் கச்சாடியா அங்கிருந்த பி.ஜே., மருத்துவ கல்லுாரியில் சிறுநீரகத் துறையில் முதுநிலை மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். இதனால், அந்த சமயத்தில் அவர் மருத்துவக் கல்லுாரியில் பணியில் இருந்தார்.
விமான விபத்து தொடர்பான தகவல் அவரை எட்டுவதற்குள், விடுதி முழுதும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் சிக்கிய மணி ஷா செய்வதறியாமல் திகைத்து போனார்.
விடுதியில் இருந்து குழந்தையை அப்படியே வாரி அணைத்துக் கொண்ட மணிஷா, அங்கிருந்து வெளியே ஓடிச் செல்ல முயன்றார்.
ஆனால், எந்த பலனும் இல்லை. அதற்குள் தீயும், கரும்புகையும் அடர்த்தியாக சூழ்ந்தது. அதனால், எதிரே இருப்பது கூட கண்ணுக்கு தெரியவில்லை.
அவசர சிகிச்சை
ஒரு நிமிடம் துணிச்சலை வரவழைத்துக் கொண்ட மணிஷா, குழந்தை தியான்ஷை தீ சுடாதவாறு தன் மார்ப்புடன் அணைத்து கேடயம் போல செயல்பட்டு விடுதியில் இருந்து வெளியேறினார்.
ஆனாலும், பயங்கரமாக பற்றி எரிந்த தீ இருவர் மீதும் பரவியது. இதில் முகம், கைகள் என 25 சதவீத அளவுக்கு மணிஷாவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. மணிஷாவின் தடுப்பு முயற்சிகளையும் மீறி, குழந்தை தியான்ஷின் முகம், கைகள், மார்பு, வயிறு என முக்கியமான பகுதிகளில் 36 சதவீத அளவுக்கு தீ சுட்டெரித்தது.
இதை கண்டு மணிஷா கதறிய நிலையில், இருவரும் அருகில் உள்ள கே.டி., மருத்துவ கல்லுாரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
செயற்கை சுவாச கருவியுடன் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.
பச்சிளம் குழந்தை என்பதால், தீப்புண்ணுக்கான சிகிச்சை தருவதில் டாக்டர்களுக்கே பெரும் சவால் ஏற்பட்டது.
தீப்புண் உடனடியாக ஆற வேண்டுமெனில், யாராவது ஒருவர் தங்களது உடலில் உள்ள தோலை தானம் செய்ய வேண்டும்.
தோல் தானம் தீக்காயங்களுடன் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் மணிஷா, இதை கேள்விப்பட்டதும், தன் உடல்வலியையும் பொருட்படுத்தாமல் குழந்தையை காப்பாற்ற தோல் தானம் அளிக்க முன்வந்தார். இதைத் தொடர்ந்து குழந்தைக்கான சிகிச்சை வேகமெடுத்தது.
''குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற தாயின் துணிச்சல் எங்கள் உள்ளங்களை உருக வைத்துவிட்டது.
''மருத்துவ ரீதியாக ஒவ்வொரு துறையை சேர்ந்த டாக்டர்களும் குழந்தையை காப்பாற்ற இணைந்து பணியாற்றினோம்,'' என்கிறார் கே.டி. மருத் துவமனையின் நிர்வா க இயக்குநரான டாக்டர் அதித் தேசாய்.
விமான விபத்துக்குப் பின் சரியாக ஐந்து வாரங்கள் வரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தாய் மணிஷாவும், சேய் தியான்ஷும் தற்போது பரிபூரண நலத்துடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
ஒரு தாயின் பாசப்போராட்டம், பற்றி எரிந்த நெருப்பில் இருந்தும், துரத்தி வந்த விதியில் இருந்தும் மகனின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.