ADDED : ஜன 16, 2025 06:29 AM

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா மாவட்டங்களில் ஏராளமான கடற்கரைகள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணியர் பொழுதுபோக்கவும், சாகசத்தில் ஈடுபடவும் மோட்டார் படகு சவாரி வசதி உள்ளது.
இதனால், பெங்களூரு, மைசூரு, மாண்டியா மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வார இறுதி நாட்களில் கடலோர மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.
தற்போது, பெங்களூரு அருகே உள்ள ராம்நகர் மாவட்டத்திலும் மோட்டார் படகு சவாரி துவங்கி உள்ளது. எந்த இடத்தில் என்று பார்க்கலாம்.
மகரிஷி தவம்
சென்னப்பட்டணாவில் உள்ளது கன்வா நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கம் கடந்த 1964ல் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவால் கட்டப்பட்டது. கன்வ மகரிஷி தவம் செய்த இடம் என்பதால், கன்வா என்று நீர்த்தேக்கத்திற்கு பெயர் வந்தது.
இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. பரந்து விரிந்து காணப்படும் இந்த நீர் தேக்கம் சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
எம்.எல்.ஏ., முயற்சி
கடந்த 2000ம் ஆண்டிற்கு முன்பு மழைக்காலங்களில் தொடர்ந்து நீர் தேக்கம் நிரம்பி வந்தது. ஆனால் மாகடியில் ஒய்.ஜி.குட்டா நீர்த்தேக்கம் கட்டப்பட்ட பிறகு, கன்வா நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து குறைந்தது.
கடந்த சில ஆண்டுகளாக இக்களூர் அணையில் இருந்து எடா நிர்வாகம் திட்டம் மூலம் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் நீர்த்தேக்கம் முழுதும் நிரம்பியது.
இந்நிலையில் நீர்த்தேக்கத்தை சுற்றி பார்க்க வரும் பயணியர் நேரத்தை செலவழிக்கும் வகையில், நீர்த்தேக்கத்தில் சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ., யோகேஸ்வர் முயற்சி செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தற்போது நீர்த்தேக்கத்தில் மோட்டார் படகு சவாரி துவங்கப்பட்டு உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு படகு சவாரியை அவர் துவக்கி வைத்தார். -- நமது நிருபர் - -

