ADDED : டிச 05, 2024 07:39 AM

மைசூரின் கிராமப்புறங்களில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. போதிய பிரசாரம் இல்லாததால், சுற்றுலா பயணியர் இத்தகைய அற்புதமான இடங்களை பார்க்கும் வாய்ப்பை இழக்கின்றனர். இவற்றில் கைலாச மலையும் ஒன்றாகும்.
கர்நாடகாவின் மைசூரு 'அரண்மனை நகர்' என, அழைக்கப்படுகிறது. நகரை சுற்றிலும் பல அரண்மனைகள் இருப்பதே, இதற்கு காரணம். உலக அளவில் பிரசித்தி பெற்ற நகராகும்.
இங்கு வரும் வெளிமாநில, வெளிநாடுகளின் சுற்றுலா பயணியர், நகர்ப்பகுதிகளில் உள்ள மிருகக்காட்சி சாலை, சாமுண்டி மலை, அரண்மனை, கே.ஆர்.எஸ்., பிருந்தாவனம் என, பல சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு செல்கின்றனர்.
இலைமறை காய்
ஆனால் கிராமப்புறங்களில், இயற்கையாக உருவான பல சுற்றுலா தலங்கள் உள்ளன. இது பற்றி தகவல் தெரியாததாலும், நகரில் இருந்து தொலைவில் உள்ளதாலும் இந்த சுற்றுலா தலங்களுக்கு வருவது இல்லை. இந்த இடங்கள் இலைமறை காயாக உள்ளன.
ஹுன்சூரின் ஹனகோடு அருகில் உள்ள இயற்கை அழகு சூழ்ந்துள்ள, பாறைகளுக்கு நடுவே கைலாச மலை அமைந்துள்ளது. இயற்கை ஆர்வலர்கள், மலையேற்ற பிரியர்களுக்காகவே கடவுள் உருவாக்கி வைத்துள்ள இடம் என்றால், மிகை அல்ல. ஆத்திகர்கள், நாத்திகர்கள் என, அனைவரையும் ஈர்ப்பதே, இம்மலையின் சிறப்பாகும்.
பொதுவாக பரபரப்பான நகர வாழ்க்கையில், தங்களை தொலைத்தவர்கள் இயற்கை எழில் மிகுந்த இடங்களை தேடி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவர்களுக்கு கைலாச மலை நிம்மதியை, மன அமைதியை அளிக்கிறது. மலை மீது ஆளுயரத்துக்கு நின்றுள்ள கற்பாறைகள், இதன் நடுவில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் கல்லுாரேஸ்வர சுவாமியை தரிசிக்கலாம்.
70 படிகள்
மலை மீது நின்று பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பசுமையான காட்சிகள், மனதை கவரும். இதன் அருகிலேயே நாகரஹொளே வனம் உள்ளது. கல்லுாரேஸ்வரா மலையை பார்க்க 70 படிகளில் ஏறி செல்ல வேண்டும். படிகளில் ஏறி செல்லும் போது, வெவ்வேறு விதமான கற்பாறைகள் சுற்றுலா பயணியரை ஈர்க்கின்றன.
உடலை சிலிர்க்க வைக்கும் குளிர்ந்த காற்று, தாவரங்களில் இருந்து வீசும் நறுமணத்தை அனுபவித்தபடி, மலையேறுவது புதிய அனுபவமாக இருக்கும். மலையேறும் சோர்வே தெரியாது. மலை மீது இரண்டு பெரிய மலைகள், எந்த ஆதாரமும் இல்லாமல் நின்றுள்ளன. தொலைவில் இருந்து பார்ப்பதற்கு, ஆமைகளை போன்று தென்படுகின்றன.
மேலும், இரண்டு பிரமாண்ட கற்பாறைகளுக்கு நடுவே அமைந்துள்ள கல்லுாரேஸ்வரர் விக்ரகம், 101 லிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வேறொரு குகையில் லிங்கமும் உள்ளது. இங்கு தினமும் பூஜை நடக்கிறது.
முந்தைய காலத்தில், கைலாச மலை அடர்ந்த காடாக, புலிகள் வாழும் இடமாக இருந்தது. இப்போது வனப்பகுதி விவசாய நிலமாக மாறியுள்ளது.
அன்று புலிகள் இருந்தன; இன்று அவைகள் இருந்ததற்கான அடையாளமாக புலி குகைகள் உள்ளன
. - நமது நிருபர் -