மகளிருக்கான உதவித்தொகை உயர்த்தினார் ம.பி., முதல்வர்: 'ராக்கி' பரிசாக ரூ.250
மகளிருக்கான உதவித்தொகை உயர்த்தினார் ம.பி., முதல்வர்: 'ராக்கி' பரிசாக ரூ.250
ADDED : ஜூலை 13, 2025 11:48 PM

போபால்: மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை வரும் அக்டோபர் முதல் 1,500 ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும், அதற்குமுன் 'ரக்ஷாபந்தன்' தினத்தையொட்டி 250 ரூபாய் ராக்கி பரிசாக பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனவும் முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார்.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு உஜ்ஜைனி மாவட்டத்தில் நல்வா என்ற பகுதியில் அரசு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு வழங்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் மோகன் யாதவ் பேசியதாவது:
சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷாபந்தன் விழா, வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, 2023 ஜூனில் அறிமுகம் செய்யப்பட்ட, மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பலன் பெறும் 1.27 கோடி பெண்களுக்கும், அதற்கு முன்பாக 250 ரூபாய் அரசு சார்பில் ராக்கி பரிசாக அளிக்கப்படும்.
இதேபோல் இத்திட்டத்தின் கீழ் தற்போது மாதந்தோறும் 1,250 ரூபாய் வழங்கப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் முதல் இது, 1,500 ரூபாயாக அதிகரிக்கப்படும். படிப்படியாக, இந்த உதவித்தொகை 3,000 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.