நதியை தனியாக சுத்தம் செய்த ம.பி. இளைஞர்: குப்பைத்தொட்டியை திருடுவதாக குமுறல்
நதியை தனியாக சுத்தம் செய்த ம.பி. இளைஞர்: குப்பைத்தொட்டியை திருடுவதாக குமுறல்
ADDED : அக் 20, 2026 06:38 PM

நதியை சுத்தம் செய்யும் போது கரையில் குப்பைகள் கொட்டுவதற்காக வைக்கப்பட்ட குப்பைத் தொட்டி திருடு போனதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு டபாகி வேதனை தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் தனியாளாக நீர்நிலைகளை சுத்தம் செய்து வருபவர் 21 வயது இளைஞர் சுரேந்திர சிங் சவுத்ரி. சமூக வலைதளங்களில் பிட்டு டபாகி என்ற பெயருடன் வலம்வரும் இவர், ஜன.26ம் தேதி ம.பி.யில் உள்ள அஜ்னார் நதியை சுத்தம் பணியை தொடங்கினார்.
8 மாதங்கள் தனியாளாக போராடி நதியை சுத்தம் செய்து முடித்தார். தனது முயற்சியை காணொளிகள் வழியாக சமூக வலை தளத்தில் பிட்டு டபாகி வெளியிட்டார். அவரின் இந்த செயல், பெரும் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றது. பிரபல தொழிலபதிர் ஆனந்த் மகேந்திரா, இங்கிலாந்து மாஜி கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் என பலரும் பிட்டு டபாகிக்கு வாழ்த்துத் தெரிவித்து பாராட்டினர்.
தற்போது அவரின் உழைப்பையும், தன்னம்பிக்கையையும் கேள்வி எழுப்பும் வண்ணம் அஜ்னார் நதி மீண்டும் மாசடைய தொடங்கியது. நதியில் கழிவுகளும், குப்பைகளும் தேங்க ஆரம்பித்து இருக்கின்றன.
இதைக்கண்ட பிட்டு டபாகி, குப்பைகளை போடுவதற்காக நதியின் கரையில் 2 பெரிய குப்பை தொட்டிகளை வைத்திருந்து இருக்கிறார். அவற்றில் ஒன்றை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
இதையறிந்த பிட்டு டபாகி கடும் அதிருப்தி அடைந்து, அதையும் ஒரு வீடியோவாக ரிலீஸ் செய்து தனது மனக்குமுறலை வெளியிட்டு இருக்கிறார். அவரின் வேதனையை அறிந்த மீம்ஸ்வாசிகள், உங்களுக்கு நேர்ந்த துயரத்திற்கு வருத்தத்தை பதிவு செய்கிறோம், கவலைப்படாமல் முயற்சியை தொடருங்கள், நாங்கள் இருக்கிறோம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
