பண மோசடி கும்பலுடன் தொடர்பு; கம்யூ., - எம்.பி.,யின் பாதுகாவலர் கைது
பண மோசடி கும்பலுடன் தொடர்பு; கம்யூ., - எம்.பி.,யின் பாதுகாவலர் கைது
ADDED : ஜூன் 06, 2025 08:21 AM

சென்னை: கட்டப்பஞ்சாயத்து மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலுக்கு உடந்தையாக இருந்த, மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி., வெங்கடேசனின் பாதுகாவலரான போலீஸ்காரர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.ஐ., ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில், 'லார்டு ஆப் தி ட்ரிங்ஸ்' என்ற பாரில், கடந்த மாதம், 22ம் தேதி, ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி.,யின் மகன் செல்வபாரதி, 28, தரப்பினரும், சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையை சேர்ந்த, அ.தி.மு.க., தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகி பிரசாத், 33, தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
பீர் பாட்டிலை உடைத்து, கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். பிரசாத் உடன் தொழில் அதிபர்களான, சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த கணேஷ்குமார்,42, போரூரை சேர்ந்த தனசேகர், 29, தி.மு.க., பிரமுகரான, சென்னை இ.சி.ஆரில், 'துாண்டில்' என்ற பெயரில் ஹைடெக் ஹோட்டல் நடத்தி வரும், துாண்டில் ராஜா,36, ஆகியோரும் களேபரத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு, அ.தி.மு.க., பிரமுகரான அஜய் வாண்டையார் என்ற அஜய் ரோகன், 36; நடிகர் கருணாஸ் கட்சியான முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த ரவுடி நாகேந்திர சேதுபதி என்ற சுனாமி சேதுபதி, 33, ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் செல்வபாரதி தரப்பினரையும், பாரில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
இது குறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்வபாரதி, அஜய் ரோகன் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் பதுங்கி இருந்த துாண்டில் ராஜாவையும் கைது செய்தனர். செல்வபாரதி, அஜய் ரோகன், சுனாமி சேதுபதி, பிரசாத் ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி., வெங்கடேசனின் பாதுகாவலராக இருந்த போலீஸ்காரர் செந்தில்குமார்,44; கோவையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்.ஐ., மணிதுரை, 48, ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பிரசாத், அஜய் ரோகன், துாண்டில் ராஜா, சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் அடங்கிய கும்பல், கட்டப்பஞ்சாயத்து, அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்வது, தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது என, அட்டூழியம் செய்து வந்துள்ளது. 2017 ல், பார் ஒன்றில் அடிதடி தகராறிலும் ஈடுபட்டு உள்ளது.
பிரசாத், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற வைத்து, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். சேலத்தை சேர்ந்த குழந்தைவேலு, அசோக் குமார் ஆகியோரிடம், 16 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார்.
அஜய் ரோகன், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம், 2.11 கோடி ரூபாய் வாங்கியும் மோசடி செய்து உள்ளார். இவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலில் கட்டப்பஞ்சாயத்து செய்யவும், தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கவும், போலீஸ்காரர் செந்தில்குமார், எஸ்.ஐ., மணிதுரை ஆகியோர் மொபைல் போன் டவர் லோக்கேஷன் எடுத்து கொடுத்து உள்ளனர். இவ்வாறு கூறினர்.