ADDED : பிப் 24, 2024 03:54 AM
சாம்ராஜ்நகர் : சாம்ராஜ்நகர் லோக்சபா தொகுதிக்கு, தற்போதைய எம்.பி.,யின் இரண்டு மருமகன்களும் முட்டி மோதுவதால் பா.ஜ., மேலிடத்துக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.
கர்நாடக லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பதில், பா.ஜ., மும்முரம் காட்டி வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இம்முறை தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி, தலைவர்களுக்கு பலரும் நெருக்கடி கொடுக்கின்றனர்.
பலத்த போட்டி உள்ள தொகுதிகளில், சாம்ராஜ்நகர் தொகுதியும் ஒன்று. தொகுதியின் எம்.பி.,யான சீனிவாச பிரசாத், இனி போட்டியிடுவது இல்லையென, ஏற்கனவே அறிவித்து விட்டார். இவரது மருமகன் டாக்டர் மோகன், அரசியலுக்கு வர ஆர்வம் காண்பிக்கிறார். சாம்ராஜ்நகர் தொகுதியில் சீட் எதிர்பார்க்கிறார்.
ஆனால், சீனிவாச பிரசாத்தின் மற்றொரு மருமகனான ஹர்ஷ வர்தனும் இதே தொகுதியில் போட்டியிட முயற்சிக்கிறார். ஒரே குடும்பத்தில் இருவர், சீட் பெற முயற்சிப்பது மேலிடத்துக்கு, தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
எம்.பி., சீனிவாச பிரசாத் கூறுகையில், “என் மருமகன்கள் டாக்டர் மோகன், ஹர்ஷ வர்தன் சாம்ராஜ்நகர் தொகுதியில் சீட் எதிர்பார்க்கின்றனர். இருவரில் யாருக்கு சீட் கொடுத்தாலும், பொறுப்புடன் பணியாற்றுவர். இவர்கள் அன்யோன்யமாக உள்ளனர்,” என்றார்.