UPDATED : செப் 20, 2024 11:29 PM
ADDED : செப் 20, 2024 11:26 PM

மும்பை: சமூக ஊடகங்களில் வெளியாகும் பொய் செய்திகளை கண்டறிந்து நீக்க, உண்மை சரிபார்க்கும் பிரிவு என்ற அமைப்பை உருவாக்க, தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு திருத்தியது செல்லாது என, மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை கட்டுப்படுத்த, தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் பல திருத்தங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்தியது.
ஆய்வு செய்வர்
அதன்படி, உண்மை சரி பார்க்கும் பிரிவு அல்லது 'பேக்ட் செக்கிங் யூனிட்' என்ற அமைப்பை உருவாக்கியது. சமூக ஊடகத்தில் அரசுக்கு எதிராக ஒரு செய்தி வெளியானால், அது சரியா, தவறா என்பதை அந்த யூனிட்டின் உறுப்பினர்கள் ஆய்வு செய்வர்.
தவறு என அவர்கள் கருதினால், அச்செய்தியை உடனே நீக்க உத்தரவிடுவர். செய்தியை பதிவேற்றிய தனி நபரோ, நிறுவனமோ அந்த உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும்.
வாட்ஸாப், பேஸ்புக் போன்ற வெளிநாடுகளில் இருந்து செயல்படும் ஊடக தளங்களும் இதற்கு விலக்கு அல்ல. அவற்றில் வெளியாகும் பதிவுகள் குறித்து இந்தியாவில் யார் புகார் அளித்தாலும், அதை விசாரித்து விளக்கம் அளிக்கவும், மேல் நடவடிக்கை எடுக்கவும் அந்த நிறுவனங்கள் இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பது திருத்தப்பட்ட விதிகளில் ஒன்று.
மத்திய அரசின் இந்த விதி திருத்தங்களுக்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. அரசுக்கு எதிரான விமர்சனங்களையும், மக்களின் கருத்து சுதந்திரம், எழுத்துரிமை ஆகியவற்றையும் ஒடுக்கும் நடவடிக்கை என ஊடகர்கள், சமூக ஆர்வலர்கள் கூறினர். இது, அரசின் அப்பட்டமான செய்தித் தணிக்கை என சுட்டிக் காட்டினர்.
வழக்கு
நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா, எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா, இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம், செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் சங்கம் ஆகியவை மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
குணால் கம்ரா, 'அரசியல் விமர்சனம் செய்வது என் தொழில். என் கருத்துக்களை சமூக ஊடகங்கள் வழியே நான் வெளிப்படுத்துகிறேன்.
'இந்த சட்ட திருத்தத்தால் என் பதிவுகள் தன்னிச்சையான தணிக்கைக்கு உட்படுத்தப்படும். அவை நீக்கப்படவும், என் சமூக ஊடக கணக்கு முடக்கப்படவும் வாய்ப்புள்ளது. இது பேச்சு மற்றும் கருத்துரிமைக்கு எதிரானது' என கூறினார்.
செல்லும்
இரு நீதிபதிகள் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. நீதிபதி கவுதம் படேல், 'மத்திய அரசு செய்த விதி திருத்தம் செல்லாது' என தீர்ப்பளித்தார். நீதிபதி நீலா கோகலே, 'செல்லும்' என தீர்ப்பளித்தார். இழுபறியை போக்க, மூன்றாவது நீதிபதியை நியமித்தார் தலைமை நீதிபதி.
அவ்வாறு நியமிக்கப்பட்ட நீதிபதி சந்துர்கர் முன் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சீர்வை ஆஜராகினர்.
சீர்வை: அரசை விமர்சிக்கும் சமூக ஊடக பதிவுகளை தடுக்கும் நோக்கத்தில் உண்மை சரிபார்ப்பு பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது.
துஷார் மேத்தா: உண்மை சரிபார்ப்பு பிரிவின் நோக்கம் அது அல்ல. அரசு சம்பந்தப்பட்ட பதிவுகளை மட்டுமே இந்த பிரிவு கண்காணிக்கும். அதில் பொய் தகவல் இருந்தால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும். உண்மையான செய்திகளை பெறுவது மக்களின் அடிப்படை உரிமை.
சீர்வை: செய்தி உண்மையா, பொய்யா என கண்டுபிடிக்க மக்களுக்கு வேறு வழிகள் இருக்கின்றன. அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்வது மக்களின் உரிமை. அதில் அரசு தலையிட முடியாது.
மேத்தா: செய்தி பொய்யானது என யூனிட் கண்டறிந்து சொன்னால், அதை நீக்காமல் இருக்க சமூக ஊடக தளங்களுக்கு சுதந்திரம் கிடையாது. அவர்கள் அதை நீக்கியாக வேண்டும்.
சீர்வை: பேக்ட் செக்கிங் யூனிட்டை அமைப்பது மத்திய அரசு. அதன் உறுப்பினர்களை நியமிப்பதும் மத்திய அரசு. ஆகவே, அரசுக்கு எதிரானசெய்தி என்றால், அதை பொய் என முத்திரை குத்தி நீக்க சொல்வது மட்டுமே அவர்களின் வேலையாக இருக்கும்.
அவ்வாறு அநியாயமாக நீக்கினால், அதை எதிர்த்து கோர்ட்டுக்கு போவதை தவிர எங்களுக்கு வேறு நிவாரணம் கிடையாது.
மேத்தா: பொய்யான செய்திகள் மக்களை சென்று சேராமல் தடுப்பது அரசின் கடமை.
சீர்வை: மத்திய அரசின் செய்தி துறையை சேர்ந்த பி.ஐ.பி., வெளியிடும் அரசு சம்பந்தமான செய்திகளே பொய்யானவை என பலமுறை அம்பலமாகி இருக்கிறது. அரசே பொய் சொன்னால் அதை நீக்க யார் உத்தரவிடுவது?
மேத்தா: அரசு மீது களங்கம் சுமத்துவது தவறு.
சீர்வை: நடந்ததை சொன்னேன். ஆதாரங்கள் சமர்ப்பித்துள்ளேன். அரசு சொன்னால் அது உண்மை, அரசு சொல்வது மட்டுமே உண்மை என்று நம்புவதற்கு முகாந்திரம் இல்லை. கோவிட் நோயால் இந்தியாவில் 50 லட்சம் பேர் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் செய்தி வெளியிடும். மத்திய அரசு 5 லட்சம் பேர் தான் பலி என செய்தி வெளியிடும். பேக்ட் செக்கர்ஸ் யூனிட் என்ன செய்யும்? நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி: தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் பிரிவு 3ல் செய்யப்பட்ட திருத்தம், வழக்கமான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கான சம உரிமை மற்றும் பேச்சுரிமையை மீறுகிறது. பொய் மற்றும் தவறாக வழிநடத்தும் பதிவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட பிரிவு என அரசு கூறுவதில் தெளிவு இல்லை. அரசு குறித்த போலி செய்தி, தவறான செய்தி என்றால் என்ன என்பதையே திருத்தப்பட்ட விதியில் அரசு விள்லவில்லை. எனவே, சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதி 3ல் செய்யப்பட்ட திருத்தம் செல்லாது.
இவ்வாறு நீதிபதி சந்துர்கர் தெரிவித்தார். மூன்று நீதிபதிகளில் இரண்டு பேர் செல்லாது என தீர்ப்பளித்துள்ளதால், அரசின் விதி திருத்தம் முடக்கப்படுகிறது.