ADDED : மே 31, 2025 12:19 AM

முல்லன்புர்: 'எலிமினேட்டர்' போட்டியில் அசத்திய மும்பை அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி வெளியேறியது.
பஞ்சாப், முல்லன்புரில் நடந்த பிரிமியர் லீக் 'எலிமினேட்டர்' போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பிடித்த குஜராத், மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
மும்பை அணிக்கு ரோகித் சர்மா, பேர்ஸ்டோவ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இரண்டு முறை (3, 12 ரன்) 'கேட்ச்' வாய்ப்பில் இருந்து தப்பினார் ரோகித். பிரசித் கிருஷ்ணா வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசிய பேர்ஸ்டோவ் (47), சாய் கிஷோர் 'சுழலில்' சிக்கினார். அபாரமாக ஆடிய ரோகித், 28 பந்தில் அரைசதம் எட்டினார்.
கோயட்சீ பந்தில் 2 சிக்சர் பறக்கவிட்ட சூர்யகுமார் (33), சாய் கிஷோர் பந்தில் அவுட்டானார். பிரசித் கிருஷ்ணா பந்தில் ரோகித் (81) ஆட்டமிழந்தார். திலக் வர்மா (25) ஓரளவு கைகொடுத்தார். கோயட்சீ வீசிய கடைசி ஓவரில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 சிக்சர் விளாச 22 ரன் கிடைத்தது.மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 228 ரன் எடுத்தது. பாண்ட்யா (22) அவுட்டாகாமல் இருந்தார்.
சவாலான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் (1) ஏமாற்றினார். சான்ட்னர் 'சுழலில்' குசால் மெண்டிஸ் (20) 'ஹிட் விக்கெட்' ஆனார். பின் இணைந்த தமிழகத்தின் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஜோடி அசத்தியது. சான்ட்னர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சுதர்சன், 28 பந்தில் அரைசதம் கடந்தார்.
பவுல்ட் வீசிய 13வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் வாஷிங்டன். மூன்றாவது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்த போது பும்ரா 'வேகத்தில்' வாஷிங்டன் (48) போல்டானார். கிளீசன் பந்தில் சுதர்சன் (80) அவுட்டாக, மும்பை அணியினர் நிம்மதி அடைந்தனர். பவுல்ட் பந்தில் ரூதர்போர்டு (24) அவுட்டானார்.
பவுல்ட் பந்தை ஷாருக்கான் சிக்சருக்கு அனுப்ப, கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன் தேவைப்பட்டது. முதல் மூன்று பந்தில் 3 ரன் மட்டும் விட்டுக்கொடுத்த கிளீசன், தொடையின் பின்பகுதி காயத்தால் வெளியேறினார். அஷ்வனி குமார் வீசிய 4வது பந்தில் ஷாருக்கான் (13) அவுட்டானார். கடைசி 2 பந்தில், ஒரு ரன் கூட கிடைக்கவில்லை. குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன் எடுத்து தோல்வியடைந்தது. டிவாட்யா (16) அவுட்டாகாமல் இருந்தார்.
'எலிமினேட்டர்' போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி, ஆமதாபாத்தில் நடக்கும் தகுதிச் சுற்று-2ல் (ஜூன் 1) பஞ்சாப் அணியை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி, ஜூன் 3ல் ஆமதாபாத்தில் நடக்கவுள்ள பைனலில் பெங்களூரு அணியுடன் மோதும்.