மும்பை ரயில் குண்டு வெடிப்பு; குற்றவாளிகளை விடுவித்த ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!
மும்பை ரயில் குண்டு வெடிப்பு; குற்றவாளிகளை விடுவித்த ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!
UPDATED : ஜூலை 24, 2025 03:52 PM
ADDED : ஜூலை 24, 2025 12:17 PM

மும்பை: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் 12 பேரை ஐகோர்ட் விடுவித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு, ஜூலை 11ம் தேதி, மும்பை புறநகர் ரயில்களில் சங்கிலி தொடர் போல அடுத்தடுத்து 7 வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் ஒட்டு மொத்த தேசத்தையும் உலுக்கியது. இந்த கொடூர சம்பவத்தில் 180க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் அப்பாவிகள் படுகாயமடைந்தனர்.
குண்டுவெடிப்பு சம்பவத்தை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 12 பேரில், 5 பேருக்கு மரண தண்டனையும், எஞ்சியவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து 2015ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அரசு தரப்பு குற்றத்தை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி, 12 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து, மஹாராஷ்டிரா அரசு மற்றும் இவ்வழக்கை விசாரித்த பயங்கரவாத தடுப்பு பிரிவு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று (ஜூலை 24) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி, மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஐகோர்ட் தீர்ப்பை ஒரு முன்னுதாரணமாகக் கருத முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.