கொலை குற்றம் சாட்டப்பட்டவர் 44 ஆண்டுகளுக்கு பின் விடுதலை
கொலை குற்றம் சாட்டப்பட்டவர் 44 ஆண்டுகளுக்கு பின் விடுதலை
ADDED : டிச 29, 2024 10:58 PM
பெங்களூரு: கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லாததாலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க விரும்பாததாலும், குற்றம் சாட்டப்பட்டவரின் மீதான வழக்கை 44 ஆண்டுக்கு பின் ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உடுப்பி மாவட்டத்தில் ஸ்ரீஅத்மர் மடத்துக்கு சொந்தமான நிலத்தில், சீதாராமா பட் என்பவர் வாடகைக்கு இருந்தார். இந்த நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், 1979 ஜூன் 8ம் தேதி சீதாராமா பட், கிருஷ்ணப்பா ஆகியோர், நாராயணன் நாயர், குன்ஹிராமா ஆகிய இருவரை கத்தியால் குத்தினர்.
இதில், குன்ஹிராமா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் சஞ்சீவ் ஹண்டா, பசவ ஹண்டா, சந்திரசேகர் பட் ஆகியோர் உடனிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
5 பேர் கைது
இவ்வழக்கு தொடர்பாக, சீதாராமா பட், கிருஷ்ணப்பா, சஞ்சீவ் ஹண்டா, பசவ ஹண்டா, சந்திரசேகர் பட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணையின் போது, சீதாராமா பட், கிருஷ்ணப்பா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றம் தண்டனை வழங்கியது. மற்ற குற்றவாளிகளான சஞ்சீவ் ஹண்டா, பசவ ஹண்டா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
சீதாராமா பட், கிருஷ்ணப்பா மீண்டும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், சீதாராமா பட் மீதான தண்டனையை உறுதி செய்தது; கிருஷ்ணப்பாவை விடுவித்தது.
சமீபத்தில், உடுப்பி போலீசார், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி பெற்றனர். இக்கொலை வழக்கு தொடர்பான விசாரணையின் போது, சந்திரசேகர பட் ஆஜராகவில்லை என்று மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
மனு தள்ளுபடி
இதையறிந்த சந்திரசேகர பட், மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம், இம்மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், சந்திரசேகர பட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், 'மனுதாரர் சந்திரசேகர பட், சஞ்சீவ் ஹண்டாவின் மருமகன். அவருக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை. சந்திரசேகர் பட், 1979 முதல் 2022 வரை பெங்களூரில் தான் வசித்து வருகிறார்.
அவர் பெயரில் சம்மன் அனுப்பப்பட்டதோ அல்லது வாரன்டோ வரவில்லை. எனவே, அவரை இவ்வழக்கில் இருந்து விடுக்க வேண்டும்' என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நாகபிரசன்னா, '44 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தின் சாட்சிகள் இப்போது கிடைக்காததால், விசாரணை நடத்துவது வீணாகிவிடும். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவரும், நேரில் கண்ட சாட்சிகளின் அடையாளம் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
'இதே நிலை சந்திரசேகர பட்டிற்கும் பொருந்தும். இவ்வழக்கு விசாரணை தொடர்வதால், எந்த பயனும் இல்லை. நீதித்துறையின் நேரத்தை மிச்சப்படுத்த, மனுதாரருக்கு எதிரான இவ்வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என்றார்.