குடியரசு தின ஊர்வலத்தில் கொலை: 28 பேருக்கு 'ஆயுள்'
குடியரசு தின ஊர்வலத்தில் கொலை: 28 பேருக்கு 'ஆயுள்'
ADDED : ஜன 04, 2025 01:10 AM

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில், 2018ல், குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏந்திச் சென்ற ஊர்வலத்தில் வகுப்புவாத மோதல் ஏற்பட்டு சந்தன் குப்தா என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 28 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
உத்தர பிரதேசத்தின் லக்னோவில், 2018ல், ஜன., 26 குடியரசு தினத்தை ஒட்டி, இளைஞர்கள் சிலர், தேசிய கொடியை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர் இதில், உ.பி.,யைச் சேர்ந்த சந்தன் குப்தா மற்றும் அவரின் சகோதரர் விவேக் ஆகியோர் பங்கேற்றனர்.
காஸ்கஞ்ச் நகரத்தில் நுழைந்த இந்த ஊர்வலம், பைரியா பகுதியில் உள்ள பெண்கள் அரசு கல்லுாரி வாசல் வழியாக சென்றது. அப்போது, அந்த ஊர்வலத்தை, அந்த பகுதியைச் சேர்ந்த சலீம், வாசிம், நசீம் உள்ளிட்டோர் தடுத்தனர். பேரணியில் பங்கேற்றோர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சலீம் துப்பாக்கியால் சுட்டதில், சந்தன் குப்தா உயிரிழந்தார்.
விசாரணை நடத்திய போலீசார், 23 பேரை கைது செய்தனர். கடந்த 2019ல் மேலும் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு லக்னோவில் உள்ள, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சலீம் உட்பட 28 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா, 80,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை சந்தன் குப்தா குடும்பத்தினர் வரவேற்றனர்.

