முருகேஷ் நிரானியின் 3 வயது பேரன் 'கோல்ப்' வாகனம் ஓட்டி சாதனை
முருகேஷ் நிரானியின் 3 வயது பேரன் 'கோல்ப்' வாகனம் ஓட்டி சாதனை
ADDED : நவ 08, 2024 07:40 AM

பாகல்கோட்: பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானியின் மூன்று வயது பேரன், புதிய சாதனை செய்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
முருகேஷ் நிரானியின் குடும்பத்தினர், பாகல்கோட்டின், முதோலில் வசிக்கின்றனர். இவரது மகன் விஜய் நிரானி, மருமகள் சுஷ்மிதாவின் மகன் சமர்த் நிரானிக்கு, 3 வயது 10 மாதங்கள் ஆகிறது. இந்த சிறுவன், 'கோல்ப் கார்ட்' வாகனத்தை எளிதாக ஓட்டுகிறார்.
இதை கண்டு ஆச்சரியமடைந்த பெற்றோர், மகன் வாகனம் ஓட்டுவதை வீடியோவில் பதிவு செய்து, இந்திய சாதனை புத்தகத்துக்கும், ஆசியா சாதனை புத்தகத்துக்கும் அனுப்பினர்.
இரண்டு அமைப்புகளின் அதிகாரிகள், சமீபத்தில் முதோல் நகருக்கு வந்து, சிறுவனின் சாதனையை நேரில் ஆய்வு செய்தனர்.
அவன், வாகனத்தை ஓட்டுவதை கண்டு அதிசயித்தனர். இந்திய சாதனை புத்தகம், ஆசிய சாதனை புத்தகத்தில் சிறுவனின் பெயர் இடம்பெற்றது. அவருக்கு விருது சான்றிதழ், பதக்கம் கொடுத்து கவுரவித்தனர்.
சுஷ்மிதா கூறியதாவது:
எங்கள் மகன் சமர்த்துக்கு, இது இரண்டாவது அவார்டாகும். அவன் பேச துவங்கிய போது, வீட்டில் அவனது பாட்டி ஸ்லோகங்கள் கற்று கொடுத்தார். 2 வயது 10 மாதம் இருந்த போது, அதிக ஸ்லோகங்கள் கூறி, இந்திய சாதனை புத்தக விருது பெற்றார்.
அவனுக்கு சிறு வயதில் இருந்தே, பைக், கார்கள் என்றால் மிகவும் விருப்பம். விளையாட்டு காரில் அமர்ந்து, சோபா, டேபிள்களில் மோதாமல், வளைந்து, திரும்பி நன்றாக ஓட்டுவான். உறங்கும் முன்னரும், காலை கண் விழிக்கும் போதும் பைக், கார் வேண்டும்.
ஒரு முறை பள்ளிக்கு செல்லும் போது, ஓட்டுனரின் கால் மீது அமர்ந்து, தானே கார் ஓட்டியுள்ளான். அதே போன்று கோல்ப் கார்ட் வாகனத்தை தனியாகவே ஓட்டினான். நான் அவனிடம், 'சரியாக பிரேக் போட, உனக்கு கால் எட்டாது. நீ எப்படி ஓட்டுவாய்' என கேட்டேன். அப்போது அவன், 'பார் மம்மி நான் நின்று கொண்டே ஓட்டுவேன்' என்றான். அதன்படி, நின்று கொண்டே ஓட்டி காண்பித்தான்.
அவனது தன்னம்பிக்கைக்கு, தடை போடக்கூடாது என்பதால், 'ஹேண்ட் பிரேக்' போட்டு, வாகனம் ஓட்ட அனுமதி அளித்தோம். வீட்டின் காம்பவுன்டுக்குள் ஓட்டுகிறான். அது மட்டுமின்றி அவனது தாத்தா, பாட்டியை வாகனத்தில் அமர்த்தி கொண்டு, தொழிற்சாலையை ஒரு சுற்று சுற்றி வந்தான்.
எனவே அவனது வீடியோவை, கின்னஸ், லிம்கா, ஏசியா, இந்தியா புக் ஆப் ரிகார்டுக்கு மனு போட்டோம். இப்போது இந்தியா மற்றும் ஆசியா ரிகார்டு அமைப்புகளின் விருதுகள் வந்தன. கின்னஸ், லிம்காவுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளான். விரைவில் விருது வரவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

