90 சதவீதம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட ஊராட்சி; தலைவராக ஹிந்து பெண் தேர்வு: மத ஒற்றுமைக்கு உதாரணம்
90 சதவீதம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட ஊராட்சி; தலைவராக ஹிந்து பெண் தேர்வு: மத ஒற்றுமைக்கு உதாரணம்
ADDED : ஏப் 05, 2025 12:33 PM

சண்டிகர்: ஹரியானாவில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிகம் உள்ள கிராமத்தில், ஹிந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது பற்றிய விவரம் வருமாறு;
ஹரியானா மாநிலத்தில் உள்ளது நுவ் மாவட்டம். மிகவும் பின் தங்கிய மாவட்டமான இங்குள்ள புன்ஹானா என்ற வட்டத்தில் சிரோலி என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் ஒட்டு மொத்த வாக்காளர் எண்ணிக்கை 3296 பேர்.
அவர்களில் 250 பேர் மட்டுமே இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு முஸ்லிம் மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர். 90 சதவீதம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்ட ஊராட்சியில் ஆச்சரிய நிகழ்வாக, இந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இந்து பெண்மணி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரின் பெயர் நிஷா சவுகான். வயது 30. சிரோலி பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார். இத்தனைக்கும் கிராமத்தில் உள்ள 15 வார்டுகளில் 14 உறுப்பினர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்பது தான் ஆச்சரியமான நிகழ்வாக உள்ளது.
தாம் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து நிஷா சவுகான் கூறியதாவது;
ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு இதுவே சான்று. நாங்கள் சகோதரர்களாக பழகி வருவது எங்களின் நீண்டகால பாரம்பரியம் ஆகும். எங்களிடம் எந்த மத பாகுபாடும் இல்லை. மத துவேஷத்தை பரப்புவோருக்கு எனது தலைவர் பதவி சிறந்த செய்தி.
இவ்வாறு நிஷா சவுகான் கூறினார்.
நுவ் பஞ்சாயத்து அதிகாரி சம்ஷேர் சிங் கூறியதாவது; இந்த கிராமத்தில் மொத்தம் 15 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். நிஷா சவுகான் உள்பட மொத்தம் 8 பேர் பெண்கள். ஏப்.2ம் தேதி தலைவர் பதவிக்கான தேர்தலின் போது 10 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் நிஷா சவுகானுக்கு ஓட்டு போட்டு தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.