ADDED : மார் 05, 2024 06:50 AM

பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.பி., முத்தேஹனுமேகவுடா, துமகூரு லோக்சபா தொகுதியில் சுற்றுப்பயணம் செய்யாமல் வீட்டிற்குள் முடங்கி உள்ளார்.
கடந்த 2014 லோக்சபா தேர்தலில் துமகூரு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி., ஆனவர் முத்தேஹனுமேகவுடா. கடந்த 2019 தேர்தலில் மீண்டும் 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த ம.ஜ.த.,வுக்கு துமகூரு ஒதுக்கப்பட்டது. இதனால் முத்தேஹனுமேகவுடா அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து 2023 சட்டசபை தேர்தலில் குனிகல் தொகுதி 'சீட்' எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர், பா.ஜ.,வில் இணைந்தார். வரும் லோக்சபா தேர்தலில் துமகூரு தொகுதியில் பா.ஜ., 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் அந்த தொகுதியில் சீட் கேட்டு பா.ஜ., முன்னாள் அமைச்சர்கள் சோமண்ணா, மாதுசாமி போட்டி போடுகின்றனர். இதனால் பா.ஜ.,வில் சீட் கிடைக்காது என்பதை உணர்ந்த முத்தேஹனுமேகவுடா, அமைச்சர்கள் ராஜண்ணா, பரமேஸ்வர் உதவியுடன் மீண்டும், காங்கிரஸுக்கு சென்றுவிட்டார்.
ஆனால் காங்கிரசிலும் அவருக்கு 'சீட்' கிடைக்கும் என்பது, இன்னும் உறுதியாகவில்லை. கர்நாடகா அரசின் டில்லி பிரதிநிதியும், சிரா எம்.எல்.ஏ.வுமான ஜெயசந்திரா, தனது மகன் சஞ்சய்க்கு 'சீட்' கேட்டு அழுத்தம் கொடுக்கிறார்.
அமைச்சர் பரமேஸ்வரின் தீவிர ஆதரவாளர் முரளிதர் ஹாலப்பாவும், களத்தில் இருக்கிறார். இதனால் முத்தேஹனுமேகவுடா சோர்ந்து போய் உள்ளார். துமகூரு லோக்சபா தொகுதியில் சுற்றுப்பயணம் செய்யாமல் அமைதியாக வீட்டிற்குள் முடங்கி இருக்கிறார்.
இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்
- நமது நிருபர் -.

